மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

தப்பியது கணிதம்: பொருளாதாரத்துக்கு மட்டும் ஏன்?

தப்பியது கணிதம்: பொருளாதாரத்துக்கு மட்டும் ஏன்?

தமிழகத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு கிடையாது, ப்ளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என நேற்று (மார்ச் 30)அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் 26ஆம் தேதி, ப்ளஸ் 2 வகுப்புக்கான பொருளாதார தேர்வு நடந்தது. மார்ச் 28ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கான கணித தேர்வு நடந்தது. வாட்ஸ் அப்பில் இந்த 2 தேர்வுகளுக்கான வினாத்தாளும், தேர்வு தொடங்கும் முன்னரே வெளியானது. இதனால், மார்ச் 28ஆம் தேதி மாலை சிபிஎஸ்இ கல்வி வாரியம், 2 தேர்வுகளையும் ரத்து செய்தது. இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் 29ஆம் தேதி மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ப்ளஸ் 2 பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25ஆம் தேதியும்,பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கான மறுதேர்வு கிடையாது என பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் அறிவித்துள்ளார்.

அனில் ஸ்வரூப், “பத்தாம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வைப் பொறுத்தவரை, அந்த வினாத்தாள் கசிவானது டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே. எனவே, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு கிடையாது. மறுதேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த 2 மாநிலங்களில் மட்டுமே நடத்தப்படும். 15 நாட்களுக்குள் அதற்கான முடிவு எடுக்கப்படும். அப்படி மறுதேர்வு நடத்துவதாக இருந்தால், அது ஜூலை மாதத்தில் நடத்தப்படும். இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாள் எதுவும் கசியவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடு வினாத்தாள்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளது. எனவே அங்கும் மறுதேர்வு எதுவும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்துக்கு மட்டும் மறுதேர்வு ரத்து செய்யப்படாதது குறித்துக் கேட்டபோது, “மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வுக்குப் பின்னர் சேர்க்கைக்காகப் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வேண்டும். பல்வேறு தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். பொருளாதாரப் பாடத்துக்கான வினாத்தாள் எங்கே கசிந்தது என்ற விவரம் சரியாக தெரியவில்லை. அதுகுறித்த விரிவான விசாரணைக்கும் தற்போது நேரம் இல்லை. எனவே, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 26ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்” என அவர் விளக்கமளித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon