கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதற்கு ஆறு வாரங்கள் அவகாசமும் வழங்கியது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் காவிரி நீரை நம்பியிருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் தமிழக மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று (மார்ச் 31) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதங்கள் அவகாசம் வழங்கக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்கள் அவகாசம் கோரியுள்ளது.
மனுவில், "தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்குத் தமிழக, புதுச்சேரி அரசுகள் காவிரி மேலாண்மை வாரியம் என்று பொருள் கூறுகின்றன. ஆனால் கர்நாடக , கேரள அரசுகள் காவிரி மேலாண்மை வாரியமாக இருக்க வேண்டியதில்லை என்று கூறுகின்றன. எனவே உச்ச நீதிமன்றம் ஸ்கீம் என்ற வார்த்தையைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"கர்நாடகத்திற்குக் கடந்த 27ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காவிரி விவகாரம் என்பது கர்நாடக மக்களின் உணர்வுபூர்வமான பிரச்னை. இதுதொடர்பாக கர்நாடகாவில் இதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உயிரிழப்புகள் உடமை இழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் கூறியபடி "ஸ்கீம்" (திட்டத்தை) செயல்படுத்தி அதனை அரசிதழில் வெளியிட்டால், அது கர்நாடக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அது கர்நாடகத் தேர்தலை பாதிக்கும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்குத் தீர்ப்பாயம் அளித்ததைத் தவிரக் கூடுதல் கடமைகள் இருக்கலாமா, தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல் நிர்வாக அதிகாரிகளையும் அதில் உள்ளடக்க முடியுமா என்னும் கேள்விகளும் மத்திய அரசின் மனுவில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மூன்று மாதங்கள் அவகாசம் கோரியுள்ளது ஏமாற்று நாடகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.