மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 9 டிச 2019

வில்லனுடன் இணையும் ஸ்ருதி?

வில்லனுடன் இணையும் ஸ்ருதி?

பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் அஜித் நடித்த பில்லா 2, விஜய் நடித்த துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாகவும் அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் இந்தியில் கமாண்டோ 2 வெளியானது. தற்போது இவர் ஜங்கலி என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர், பாலிவுட்டில் மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வித்யூத் ஜாம்வாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் ‘யாரா’ படத்தில் நடித்துவருகின்றனர். சமீபகாலமாக ஸ்ருதிஹாசன் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாத நிலையில் காதலர் மைக்கேல் கார்சலேவைத் திருமணம் செய்ய இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்தி வெளியாகியது. ஆனால் தற்போது அவர் வித்யூத் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படம் 90-களின் பின்னணியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய வேடங்களில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதன் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இது குறித்துக் கூறியுள்ள வித்யூத், "தேசிய விருது பெற்ற இயக்குநருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும்" என்று மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon