மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

எடப்பாடிக்கு தவறான சட்ட ஆலோசனை!

எடப்பாடிக்கு தவறான சட்ட ஆலோசனை!

காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது, இன்று (மார்ச் 31) உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று காவிரி நதி நீர்ப்பங்கீடு வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவித்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது. இதற்காக ஆறு வார காலக்கெடுவையும் விதித்தது. கடந்த 29ஆம் தேதியுடன் இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு செய்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகா மாநில அரசும் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு வார காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச் 29) தமிழக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, மத்திய அரசை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழக அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் விஜயகுமார் இருவரும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இன்று (மார்ச் 31) காலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் டெல்டா பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது, அதனை அவமதிப்பதாகும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சில சட்ட நிபுணர்கள், தமிழக முதலமைச்சருக்கு தவறான சட்ட ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். “தமிழக அரசு தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கினால், ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், காவிரி விவகாரம் குறித்து மேற்கொண்டு வழக்கு ஏதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த வழக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. மேலும், இந்த வழக்கை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று ஆராய நீதிபதிகள் குழு நியமிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

அந்தக்குழுவின் பரிந்துரையின் பெயரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்பதும், நிராகரிப்பதும் முடிவு செய்யப்படும். திட்டம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டு கர்நாடகா மாநில அரசும், மத்திய அரசும் அளித்துள்ள மனுக்கள் வரும் திங்கள்கிழமையன்று (ஏப்ரல் 2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வை இது தொடர்பாக தமிழக அரசு அணுகாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, கடந்த மாதம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமரைச் சந்தித்து மேலாண்மை வாரியம் அமைக்குமாறு வலியுறுத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, கடந்த 17 நாட்களாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர் அதிமுக உறுப்பினர்கள். இந்த நிலையில், இதுவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு யாரும் இதுதொடர்பாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon