மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ஸ்ரீதேவி விவகாரம்: மகாராஷ்டிரா அரசு பதில்!

ஸ்ரீதேவி விவகாரம்: மகாராஷ்டிரா அரசு பதில்!

ஸ்ரீதேவி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது ஏன் என்று மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24ஆம் தேதி திடீர் மரணம் அடைந்தார். அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டது. பின்னர் அவருக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்றதால், ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்ற அனைவருக்கும் அரசு மரியாதை வழங்கப்படுவதில்லையே என்கிற கேள்வி அப்போதே எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்ரே கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஸ்ரீதேவி உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது ஏன் என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்கு மகாராஷ்டிர அரசு சார்பில் பிரிஜேஷ் சிங் அளித்துள்ள பதிலில், “அரசு மரியாதை வழங்கப்படும் விஷயத்தில் முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்க முடிவு செய்தார். பிப்ரவரி 26ஆம் தேதி அதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் மும்பை புறநகர் ஆட்சியருக்குப் பிறப்பித்தார். ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் அவர்கள் சார்ந்த துறைக்குச் செய்த சேவைக்காக அரசு மரியாதை பெறத் தகுதியானவர்கள். அந்த வகையில் 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 41 பேருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே, கவிஞர் மங்கேஷ் பத்கோன்கர் போன்றவர்களும் முழு அரசு மரியாதை பெற்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon