மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ரஜினி படத்தில் யார்?

ரஜினி படத்தில் யார்?

ரஜினியின் இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. கண் அசைத்தால் தியேட்டர்களுக்குப் படத்தைக் கொடுக்க ‘காலா’ தயாரிப்பாளர்களும், வேக வேகமாக உலகின் பல நாடுகளில் வெட்டி ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ‘எந்திரன் 2.0’ திரைப்பட வேலைகளைத் துரிதப்படுத்த 2.0 தயாரிப்பாளர்களும் தயார். ஆனால், தற்போதைய தமிழ் சினிமா வேலைநிறுத்தம் இதற்குத் தடையாக இருக்கிறது.

ஒருபக்கம் இப்படியிருக்க, கார்த்திக் சுப்பராஜ் - ரஜினி இணையும் படத்துக்கான வேலைகள் மட்டும் எந்தத் தாமதமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ரஜினி சொன்னதும் ஷூட்டிங் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படத்துக்கான டெக்னீஷியன்களைத் தேர்வு செய்து வருகிறார் கார்த்திக்.

நீக்கப்பட்ட அஞ்சலி

தீபிகா படுகோன், த்ரிஷா, அஞ்சலி ஆகிய மூவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் பேசப்பட்டிருந்தது. ஆனால், அஞ்சலி இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தீபிகா, த்ரிஷா ஆகிய இருவரில் யார் என்ற கேள்விதான் தற்போது இருக்கிறது.

‘பத்மாவத்’ திரைப்படத்துக்குக் கிடைத்த எதிர்ப்பு, ஆதரவு ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும் தீபிகா, தற்போது ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியிருக்கிறார். இந்தியில் இர்ஃபான் கானுடன் ஒரு படம் மட்டும் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால், இதுவரையிலும் அந்த புராஜெக்ட் களம் காணாததால் அந்தத் தேதிகளை ரஜினி படத்துக்கு வாங்கிவிடுவதற்கான முயற்சி நடக்கிறது. அதுபோலவே, தான் கமிட் ஆன படங்களை எவ்வித தாமதமும் இல்லாமல் முடித்துக்கொடுத்துவிட்ட த்ரிஷா தற்போது அவற்றின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். எனவே, இரு நடிகைகளும் தற்போது ரஜினி படத்தில் கமிட் ஆக எவ்வித தடையுமின்றி இருக்கிறார்கள்.

பிறகு யார் தடுப்பது?

ரஜினியின் கால்ஷீட் தேதிகள்தான் எந்த ஹீரோயினை கமிட் செய்வது என்ற குழப்ப நிலையை உருவாக்கியிருக்கின்றன. கார்த்திக் சுப்பராஜைப் பொறுத்தவரையில், இன்னும் எவ்வளவோ நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரக் கூடிய திறமை உள்ள நடிகைகள் என இம்மூவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், ரஜினி கொடுக்கக்கூடிய கால்ஷீட் தேதியைப் பொறுத்தே அவருக்கு ஜோடி யார் எனத் தெரியும் என்பதால் காத்திருக்கிறார்கள். அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையில் பயணம் செய்துகொண்டிருக்கும் ரஜினிக்குத் தற்போதைய முழுக் கவனமும் அவரது மாநாடு மற்றும் மன்ற நிர்வாகிகள் மீதுதான் இருக்கிறது. அடிப்படையைச் சரியாக்கிவிட்டால், அதற்குப் பிறகான பயணத்தில் முழு வேகத்தில் முன்னேறலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர் கால்ஷீட் தேதியை, ‘சொல்றேன். சொல்லிடுறேன்’ என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

அரசியலில் இறங்கிய பிறகு எதற்கு நடிக்க வேண்டும் என்ற சர்ச்சை அவர் ரசிகர்கள் மத்தியில் உருவாகவில்லை. எம்.ஜி.ஆர் வழியில் அரசியல் செய்வேன் என்று கூறியிருக்கும் ரஜினி, கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்திருக்கும் முடிவை எம்.ஜி.ஆரின் அரசியல் வழியிலேயே பார்க்கின்றனர்.

குறிப்பு: அஞ்சலி ஏன் இந்தப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டார் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது என்பதால் அதைப் பற்றிப் பேசவில்லை.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon