மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அண்ணா - கருணாநிதி: மனக்கசப்பைத் தீர்த்துவைத்த ம.நடராஜன்

அண்ணா - கருணாநிதி: மனக்கசப்பைத் தீர்த்துவைத்த ம.நடராஜன்

மறைந்த ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 30) தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. நடராஜனின் நெடுநாள் தோழர் பழ.நெடுமாறன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தலைவர்களின் உரையை நேற்று மாலை 7 மணி பதிப்பில் வெளியிட்டிருந்தோம்.

திமுக தேர்தல் பணிக் குழுச் செயலாளரும், நடராஜனுக்கு வாழ்நாள் முழுவதும் உற்ற நண்பருமாக விளங்கியவருமான எல்.கணேசன் உடல்நலக் குறைவால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலையில், அவர் எழுதித் தந்த உரையை அவரது அண்ணன் மகள் நிர்மலா வாசித்தார். அப்போது அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்பைத் தீர்த்து வைத்தவர் நடராஜன்தான் என்ற வரலாற்றுத் தகவலையும் வெளியிட்டார்.

“1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் நடராஜன் அவர்களையும் எல்.கணேசனையும் ஒருங்கிணைத்தது. 1965ஆம் ஆண்டு ஜனவரி 25இல் சென்னையில் மாணவர்களை ஒன்றுபடுத்தி போராட்டத்தை விரிவுபடுத்தியவர் எல்.கணேசன். தஞ்சையை ஒன்றுதிரட்டியவர் நடராஜன். அந்த நிலையில் ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 7ஆம் தேதி வரை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கிறது அப்போதைய பக்தவச்சலம் அரசு. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவர்களைத் திரட்டுகிறார் எல்.கணேசன். தஞ்சையில் ம.நடராஜன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.ராஜமாணிக்கம், ராவுசாப்பட்டி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.

“அண்ணாவும் கலைஞரும் மன வருத்தத்தில் இருந்த அந்தக் காலகட்டத்தில் தஞ்சையில் மாணவர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டனர். மாநாட்டுக்குக் கலைஞர் வருவதற்குச் சற்று தாமதமானதால் வேறு வழியில்லாமல் மாநாடு தொடங்கப்பட்டது. கலைஞர் மதுரையிலிருந்து வந்துகொண்டிருக்கும்போது வல்லத்தில் இருந்துகொண்டு மாநாட்டு நிலைமை என்னவென்று கேட்கிறார். இதையறிந்த உடனே தஞ்சை நகரச் செயலாளர் எஸ்.நடராஜன் அவர்களும் ம.நடராஜனும் காரில் வல்லத்துக்குப் பறந்து சென்று கலைஞரை மாநாட்டுக்கு அழைத்து வந்தனர். மேடைக்கு வந்ததும் அண்ணா, கலைஞரை அருகில் அழைத்து செல்லமாகக் குட்டினார். அதன்பிறகு நான் விட்ட இடத்திலிருந்து தம்பி கருணாநிதி தொடர்வார் என்று சொல்லிவிட்டு அண்ணா அமர்ந்தார்.

பின்னர் பேசுவதற்கு வந்த கலைஞர் அவர்கள், ‘அண்ணா பேசிவிட்டார் என்றால் தமிழ்நாடே பேசிவிட்டது என்று பொருள். எனவே என்னுடைய உரையை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்’ என்று கூறி தனது உரையை முடித்துவிட்டார்.

பின்பு அண்ணாவையும் கலைஞரையும் ஆபிரகாம் பண்டிதர் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றது நகரச் செயலாளர் எஸ்.நடராஜன், ம.நடராஜன் இருவரும்தான். அங்கே அவர்கள் மனம்விட்டுப் பேசிக் கொண்டார்கள். அண்ணாவிடமும் கலைஞரிடமும் இருந்த சிறு மனக்கசப்பும் நீங்கியது. இது திமுகவிலேயே ஏற்பட்ட திருப்புமுனை. அதிமுகவில் மட்டுமல்ல; திமுகவில் ஏற்பட்ட இந்நிகழ்ச்சியும் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். எதை, எப்படி, எப்போது செய்து முடிப்பது என்பதற்கான ம.நடராஜன் அவர்களின் தனித் திறமைக்கான எடுத்துக்காட்டு இதுவாகும்” என்று அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

மேலும் அந்த உரையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் தாங்கிப் பிடித்து திராவிடம் காத்தவர் நடராஜன். எந்தக் கட்சிக்கும் அவர் தலைவரில்லை. ஆனால், எல்லாத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகண்டவர். அவருடைய மன உறுதியும் ஆற்றலும் அவர் மிகவும் நேசித்த அவருடைய மனைவி சசிகலாவுக்கு அமைய வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டு எல்.கணேசன் எழுதிக் கொடுத்த உரையை நிறைவு செய்தார்.

நடராஜன் படத்திறப்பு: தலைவர்களின் உரை!

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon