மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

திருமணச் சர்ச்சை: சார்மி பதில்!

திருமணச் சர்ச்சை: சார்மி பதில்!

மின்னம்பலம்

இனிமேல் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை சார்மி.

நடிகைகள் என்றாலே அவர்களின் காதலைப் பற்றியும் திருமணம் குறித்தும் கேட்பதே சில ஊடகங்களின் பொதுப் புத்தியாக உள்ளது. அந்தவகையில் தமிழில் காதல் அழிவதில்லை, லாடம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வந்தார். தற்போது அவருக்குப் பட வாய்ப்புகள் குறையவே, தெலுங்கில் பைசா வசூல், மெஹபூபா உள்ளிட்ட படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சார்மியிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், “என் வாழ்க்கையில் ஒருவரை ஆழமாகக் காதலித்தேன். இரண்டு விஷயங்களால் அந்தக் காதல் முறிந்துவிட்டது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் அதே காரணங்களுக்காகப் பிரிய வேண்டி வந்திருக்கும். அவரது நடவடிக்கையால் திருமண வாழ்க்கைமீது வெறுப்பு வந்துவிட்டது. காதல் மற்றும் திருமணம் மீதான நம்பிக்கையும் போய்விட்டது. ஆனாலும் அவர் நல்லவர்தான். இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்வது பற்றிச் சிந்திக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது, அவருக்காகக் காத்திருப்பது, நேரம் ஒதுக்குவது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என்பது எல்லாம் என்னால் முடியாது. எனவே, இனிமேல் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னைக் காதலித்து ஏமாற்றியவர் பெயரை வெளியிட விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சார்மி திருமணம் குறித்து இவ்வாறு கூறியுள்ளது டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon