மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

போலி வங்கிக் கிளை: ரூ.1.37 லட்சம் மோசடி!

போலி வங்கிக் கிளை: ரூ.1.37 லட்சம் மோசடி!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் போலியாக வங்கிக் கிளை திறந்து மக்களிடம் டெபாசிட் தொகையாக ரூ.1.37 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், பல்லியா மாவட்டத்தில் கர்நாடக வங்கிக் கிளையைப் போலியாகத் திறந்து மோசடி செய்த ஆஃபக் அகமது என்பவர் உள்ளூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வினோத் குமார் கம்பாலி என்ற பெயரில் கர்நாடக வங்கி மேலாளர் போல தன்னைச் சித்தரித்துக்கொண்டு பொதுமக்களிடையே ரூ.30,000 முதல் ரூ.70,000 வரையில் சேமிப்புக் கணக்கு தொடங்க வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் சுமார் 15 சேமிப்புக் கணக்குகளில் ரூ.1.37 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த மோசடியில் சந்தேகித்து கர்நாடக வங்கியின் டெல்லி கிளைக்குப் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வங்கி அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்தில் இதுபற்றிப் புகாரளித்துள்ளனர். உடனடியாக அவரைக் கைது செய்த காவல் துறையினர் குற்றவாளியிடமிருந்து ஸ்டேசனரி பொருள்கள், மூன்று கணினிகள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சில பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர். காவல் துறையினர் அந்த நபரை விசாரித்தபோது ரிசர்வ் வங்கியின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக் கோரியுள்ளனர். ஆனால், அக்கிளையை நடத்துவதற்கு அதுபோன்ற எந்தவோர் ஆவணமும் அவரிடம் இல்லை.

அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் வீட்டை ரூ.32,000க்கு வாடகைக்கு எடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு மாதம் ரூ.5,000 சம்பளம் பேசி இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. வங்கிக் கிளையின் இதர ஊழியர்களுக்கு இந்த மோசடி பற்றி எதுவும் தெரியாது என்ற நிலையில் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon