மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

39 இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர முயற்சி!

39 இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர முயற்சி!

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் ஏப்ரல் 1ஆம் தேதி ஈராக் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதியன்று 91 வெளிநாட்டவரை ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இவர்களில் 40 பேர் இந்தியர்கள். 51 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்தார். இவர் 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் படுகொலை செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஈராக் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு கடத்தப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்தியை உறுதிப்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுத்துவிட்டார். அவர்களின் நிலை தற்போது வரை என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டன. தற்போது அந்த மரபணு சோதனையின் அடிப்படையில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிந்தது.

மார்ச் 20ஆம் தேதி மாநிலங்களவையில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக உறுதிபட அறிவித்தார். இதையடுத்து, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களையாவது எங்களிடம் ஒப்படையுங்கள் என்று இறந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியதையடுத்து, மத்திய அமைச்சர் வி.கே.சிங் நாளை (ஏப்ரல் 1) ஈராக் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இறந்த 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர அரசு முயற்சி செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 31 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon