நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்குப் புதிய உயர்தொழில்நுட்பத்தைச் சீனப் பாதுகாப்புத் துறை ஆய்வகம் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் போர்களினால் இறப்பவர்களைவிட கொசுக்கடியால் பரவும் நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்தாலும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.
இந்நிலையில் சீனாவில் பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள பாதுகாப்புத் துறை ஆய்வகம் கொசுக்களை எவ்வாறு ஒழிப்பது என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த பாதுகாப்புத் துறை ஆய்வகம் தற்போது கொசுக்களைக் கண்டறிந்து அழிப்பதற்கான ரேடார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த ரேடாரிலிருந்து செல்லும் அதிவிரைவான மின்காந்த அலைகள் 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களின் மீது பட்டு மீண்டும் திரும்பி வந்து, அது எந்த வகைக் கொசு, அதன் திசைவேகம் என்ன என்பது குறித்த தகவல்களைத் தரும். இதனால் கொசுக்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், முன்கூட்டித் தடுத்தல் ஆகிய வழிகளில் கொசுத் தொல்லையை ஒழிக்க இந்த ரேடார் தொழில்நுட்பம் உதவும் என்று சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்