மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

வலுவடையும் கேரளப் பொருளாதாராம்!

வலுவடையும் கேரளப் பொருளாதாராம்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத்தை நிதி ஆலோசகராக நியமித்தபோது அவரது கட்சியில் உள்ள பலர் அதை ஆதரிக்கவில்லை. ஹார்வர்ட் பேராசிரியர்களின் நம்பிக்கைக்குரியவராக கீதா கோபிநாத் இருந்தபோதிலும், அவரது கருத்தியல் பற்றி அவர்கள் கவலையடைந்தனர்.

2006 -2011 வரையிலான காலகட்டத்தில் மாநில திட்டமிடல் வாரியத் தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் பொருளாதார நிபுணர் பிரபாட் பட்நாயக், கீதா கோபிநாத் பிரதிநிதித்துவப்படுத்தும் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் பொறிக்குள் சிக்கிவிடவேண்டாம் என அரசாங்கத்தை எச்சரித்தார்.

எனினும், 20 மாதங்களுக்கு பிறகு, தற்போது கேரளாவின் பொருளாதாரம் புதுப்பிக்கப்படுவதற்கான திட்டங்களுக்கான உந்து சக்திகளில் ஒருவராக கீதா கோபிநாத் உள்ளார்.

கீதா கோபிநாத், “என்னை நிதி ஆலோசகராக நியமித்தவர்களுக்கு யாரை நியமிக்கிறோம் என்பது நிச்சயமாகத் தெரியும். அவர்கள் பல்வேறு விஷயங்களில் என் கருத்தைக் கேட்டறிந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கீதா கோபிநாத் (46) 382 ஆண்டுகள் பழமையான ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முதல் இந்தியப் பெண் பேராசிரியர். அங்கே நிரந்தரப் பணியில் இருக்கும் கீதா கேரள அரசின் நிதி ஆலோசகராகவும் செயல்பட்டுவருகிறார். அவருடைய பெற்றோர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கேரள அரசின் நிதி ஆலோசகர் என்னும் பணி அவ்வளவு எளிதாக அவருக்கு அமையவில்லை. எனினும் தன் பணியில் முனைப்போடு செயல்பட்டுவருகிறார். “என்னால் முடிந்த வரை சிறப்பாகப் பணியாற்ற முயல்கிறேன்” என்கிறார் கீதா கோபிநாத். கேரள அரசியல் அவரது வேலையைக் கடினமாக்குகிறது. சில மாதங்களுக்கு முன்பு, மாநிலத்தின் பெருகிவரும் செலவினங்களைப் பற்றி அவர் கவலை கொண்டார். ஆனால், ஆளும் கூட்டணியின் ஒரு கூட்டாளியான சிபிஐ அதற்காக அவரை விமர்சித்தது. ஆனால், அவர் அரசியலில் பட்டுக்கொள்ளாமல் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறார். "மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது நல்ல பொருளாதார நிலையல்ல. வருவாய்ப் பற்றாக்குறையும் மிக அதிகமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

கேரளாவின் எதிர்காலப் பொருளாதாரத்தைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் கீதாவுக்கு உள்ளது. ஜிஎஸ்டி மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பணம் குறைவது இந்த லாபத்தைச் சரிக்கட்டிவிடுமோ என்றும் கவலைப்படுகிறார். “ஜிஎஸ்டியின் முழு வருவாயும் இன்னும் நமக்கு வரவில்லை. ஜிஎஸ்டி அமைப்பு முறைப்படுத்தப்பட்டதும் அது கேரளாவுக்குப் பயனளிப்பதாக இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு” என்று சொல்லும் கீதா வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தை நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon