மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

பாஜகவால் தொகுதிகளை இழந்தோம்!

பாஜகவால் தொகுதிகளை இழந்தோம்!

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் ஆந்திராவில் மேலும் சில தொகுதிகளில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றிருக்கும் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சியின் 37ஆவது ஆண்டு தொடக்‍க விழாவையொட்டி நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தற்குப் பிறகு நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். இந்தக்‍ கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சியை முன்வைத்தே மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கொடுத்த வாக்‍குறுதியை மீறும் வகையில், ஆந்திராவுக்‍கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததன் மூலம், மத்தியில் ஆளும் பாஜக மிகப் பெரிய அநீதியை இழைத்துவிட்டது” என்று குற்றம்சாட்டினார். மேலும், பாஜகவுடன் கடந்த தேர்தலில் தாங்கள் கூட்டணி அமைத்திருக்‍காவிட்டால், கூடுதலாக 15 தொகுதிகளில் தாங்கள் வெற்றிபெற்றிருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் பாஜக-தெலுங்கு தேசம் இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸிங் மூலம் எம்பிக்களுடன் உரையாடிய சந்திரபாபு நாயுடு, “தமிழ்நாட்டில் செய்ததைப் போன்று ஆந்திராவிலும் செய்ய மோடி முயற்சிக்கிறார். நாடு முழுவதும் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான அலை ஏற்பட்டுள்ளது. உ.பி. மற்றும் பிகார் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியுற்றதே இதற்குச் சாட்சி” என்று பேசியிருந்தார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon