மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

உலக இட்லி தினம்: இட்லி தமிழ் உணவா?

உலக இட்லி தினம்: இட்லி தமிழ் உணவா?

தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் சிற்றுண்டி என்றால் உடனே நினைவுக்கு வருவது இட்லி. அந்த இட்லியைக் கொண்டாடும் விதமாக இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான உணவு என்றால் அது இட்லிதான். குறிப்பாகத் தென்னிந்தியாவில் தினந்தோறும் காலை உணவில் இட்லி அனேகமாக இடம்பெற்றிருக்கும். சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு இட்லி.

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு. இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. இட்லி செய்வது மிகவும் சுலபமானது. இது வெள்ளை நிறத்தில், மிருதுவாக இருக்கும்.

இட்லியைத் தென்னிந்திய உணவுப் பொருள் என்று கூறுகிறோம். தமிழ் உனவு என்கிறோம். ஆனால் உண்மையில் இட்லி தென்னிந்திய, தமிழ் உணவுப் பொருளா? இதற்கு வரலாறு விளக்கம் தருகிறது.

முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் தோசை பற்றியே குறிப்பு இருந்ததுள்ளது. இட்லி பற்றிய தகவல் ஏதும் இல்லை. இந்திய உணவு குறித்த வரலாறு புத்தகத்தை பத்தாம் நூற்றாண்டில் கன்னட மொழியில் எழுதிய "வட்டாரதனே" என்ற நூலில் சிவகோடி ஆச்சாரியார் என்பவர் "இட்டலிகே" என்று குறிப்பிட்டுள்ளதாகத் குறிப்பிடபட்டுள்ளது.

1120ஆம் ஆண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் இட்லியை "இட்டரிக்கா" என்ற பெயரில் குறிபிட்டிருந்ததாகத் தெரிகிறது.

7ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குச் சுற்றுபயணம் வந்த சீன அறிஞர் யுவான் சுவாங் இந்தியாவில் இட்லி உணவை சமைப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளதாக ஆச்சாரியார் தெரிவித்திருக்கிறார்.

இட்லி என்ற உணவு இந்தோனேசியாவுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தோனிசியாவில் இட்லி என்ற உணவை கெட்லி என்று அழைத்துள்ளனர். சோழர்கள் ஆட்சிகாலத்தில்தான் இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இட்லி என்ற உணவை கொண்டு வந்ததாகவும் கருதப்படுகிறது.

இட்லி எப்படி வந்தால் என்ன, அது சுவையாக இருக்கிறது என்பதுதானே முக்கியம்!

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon