மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

உயரும் மொபைல் இணையப் பயன்பாடு!

உயரும் மொபைல் இணையப் பயன்பாடு!

இந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் இந்திய மொபைல் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 47.8 கோடியாக அதிகரிக்கும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.ஏ.எம்.ஏ.ஐ. மற்றும் கண்டர் ஐ.எம்.ஆர்.பி. நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அதிகமாகப் பரவி வருகின்றன. இதன்மூலம் இணையம் பயன்படுத்துதலும் எளிமையாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கணக்குப்படி இந்தியாவில் 45.6 கோடிப் பேர் மொபைல் மூலம் இணையதளம் பயன்படுத்துகின்றனர். இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவிகிதம் கூடுதலாகும். இதன் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 47.8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த விலையில் தயாரித்து வருகின்றன. அதற்கேற்றாற்போல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்தும் வருகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியே கட்டணம் குறைந்ததற்குக் காரணமாகும். மேலும், ஜூன் மாதத்தில் 29.1 கோடிப் பேர் நகர்ப்புறங்களிலும், 18.7 கோடிப் பேர் கிராமப்புறங்களிலும் மொபைல் மூலம் இணையதளம் பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நகர்ப்புறங்களில் 18.64 சதவிகிதமும், கிராமப்புறங்களில் 15.03 சதவிகிதமும் மொபைல் மூலம் இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நகர்ப்புறங்களில் மொபைல் இணையம் பயன்படுத்துபவர்களில் 46 சதவிகிதமும், கிராமப்புறங்களில் 57 சதவிகிதமும் 25 வயதுக்குட்பட்டவர்களாவர். அதேபோல இளைய வயதினர் எல்லாவிதமான இணையச் சேவையையும் பயன்படுத்துகின்றனர். நடுத்தர வயது மற்றும் வயதான ஆண்கள் சமூக வலைத்தளங்களையும், பிரவுசிங் செய்யவும் பயன்படுத்துகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரவுசிங் சேவைக்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர். வேலைக்குச் செல்லாத பெண்களைப் பொறுத்தவரையில் டெக்ஸ்ட் சேட்டிங்கிற்காக அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon