மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

‘டீ’ ஊழல்?

‘டீ’ ஊழல்?

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அலுவலகத்திற்காக தினமும் 18,591 கோப்பை தேநீர் வாங்கப்படுவதாகவும், 2017-18ஆம் ஆண்டில் மட்டும் இதற்காக 3.4 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சி. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மகாராஷ்டிரா பாஜக அரசு டீ ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அமைச்சரவை, கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றது. விதர்பா விவசாயிகள் தற்கொலை விவகாரம் உள்பட அம்மாநிலத்தில் உள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்ற பிரசாரத்தின் அடிப்படையில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. ஆனால், இதுவரை பாஜக அரசு எதற்கும் தீர்வு காணவில்லை என்று எதிர்க்குரல் எழுப்பி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதியன்று பட்னாவிஸ் அரசு டீ ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம். இதுகுறித்து, அவர் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில், முதலமைச்சர் பட்னாவிஸ் அலுவலகத்துக்காக வாங்கப்பட்ட தேநீர் செலவு மட்டும் 577 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

2015-16ஆம் ஆண்டில் 58 லட்சம் ரூபாயும், 2016-17ஆம் ஆண்டில் 1.2 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் 3.4 கோடியும் இதற்கென செலவழிக்கப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு நாளும் மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகத்தில் மட்டும் 18,591 கோப்பை தேநீர் வாங்கப்பட்டுள்ளது.

“இத்தனை ஆண்டுகளாக பச்சை தேநீர், மஞ்சள் தேநீர் போன்றவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்; இது ஏதோ தங்கமான தேநீர் போலிருக்கிறது. பட்னாவிஸ் எப்படிப்பட்ட தேநீரைப் பருகிறார்? எவ்வளவு பருகிறார்? மகாராஷ்டிராவின் ஒருபக்கத்தில் விவசாயிகள் மடிந்து கொண்டிருக்கும்போது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேநீர் வாங்கச் செலவழிக்கிறது மகாராஷ்டிரா மாநில அரசு” என்று அவர் குறை கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சஞ்சய், ”தேநீர் விற்றவன் என்று கூறி பெருமையைத் தேடிக்கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால், வழக்கமான கடைகளில் கிடைக்காத, யாருமே குடிக்க முடியாத தேநீரைப் பருகுகிறார் பட்னாவிஸ்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா தலைமைச்செயலகம் அமைந்துள்ள மந்த்ராலயாவில், பூச்சிக்கொல்லி நிறுவனமொன்று ஒரு வாரத்தில் 3,19,400 எலிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், இது குறித்து கேள்வி எழுப்பினார் ஏக்நாத் கட்சே. எலி ஊழல் என்று பெயரிட்டு, காங்கிரஸ் கட்சி இதனைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இதனை மேற்கோள் காட்டிய சஞ்சய் நிருபம், பட்னாவிஸ் அலுவலகத்திற்காக வாங்கப்பட்ட தேநீரை அந்த எலிகள்தான் குடித்திருக்கும் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon