மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

காங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் கிடைக்காது!

காங்கிரஸ் ஆட்சியில்  தண்ணீர் கிடைக்காது!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துவருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் ‘வேல் சங்கமம்’ பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேசுகையில், “மேலாண்மை வாரியம் என்ற பெயரையே உச்ச நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. நதி நீர் பங்கீட்டுக்கு திட்டம் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. திட்டத்துக்கான வேலை ஏற்கனவே தொடங்கியுள்ளது. நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதை ஒட்டி நதி நீர் பங்கீட்டுக்கான திட்டம் வகுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழகத்தில் ஏற்றுக்கொண்டார்களா. ஆனால் மத்திய அரசு நிச்சயம் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்” எனப் பதிலளித்தார்.

கர்நாடகா, தமிழகம் இரண்டுமே பாஜகவுக்கு ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட ராஜா, “கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் தேர்தல் ஆணையம் காவிரி குறித்த திட்டத்துக்கு அனுமதிக்குமா எனத் தெரியவில்லை. கர்நாடகாவில் தற்போது உள்ள காங்கிரஸ் சர்க்கார் தண்ணீர் தருவதாகக் கூறியுள்ளதா? எனவே, காங்கிரஸ் அங்கு ஜெயித்தால் தண்ணீர் கிடைக்காது. தமிழக மக்களின் பிரார்த்தனையே மாறியிருக்க வேண்டும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon