மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 நவ 2019

கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதா?

கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதா?

நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தள்ளிக்கொண்டிருக்கும் மத்திய அரசின்மேல் தமிழகமே அதிருப்தி கொண்டிருக்கிறது. தங்களது கோபத்தை ஒவ்வொருவரும் அவரவர் துறை சார்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏமாந்துபோன மனதுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

“வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு, பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது.

“விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும், கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு, என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’ என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது.

கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்திற்கு விளக்க வேண்டிய மத்திய அரசே உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பது விசித்திரமாய் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்.

அரசியலின் பற்சக்கரங்களுக்கு மத்தியில் விவசாயிகளின் விலா எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவின் ‘கல்ச்சர்’ என்ன என்று கேட்டபோது ‘அக்ரிகல்ச்சர்’ (விவசாயம்) என்றார் வல்லபபாய் படேல். அவரை நேசிக்கிறவர்கள் இதை மறந்திருக்க மாட்டார்கள்.

மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்குள்ளேயே சுற்றுவது, கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதாகிவிடும்.

கண்ணீர் வற்றிப்போன தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் ரத்தம் கசிவதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.”

மேற்கண்டவாறு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தேவையான அளவு காவிரி நீரைக் குறைத்துக் கொடுத்த நீதிமன்றத்தையும், தேவைக்கு அதிகமாக மத்திய அரசையும் விமர்சித்துவிட்டு கடைசியில் “ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முடித்திருக்கிறார் வைரமுத்து.

காவிரி வாரியம் அமைக்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு எல்லோரும் கருத்து தெரிவித்தாலும், இத்தனை நாள்கள் இயங்காமல் இருந்துவிட்டு இப்போது வந்து சட்டையைப் பிடிக்கிறார்களே என்று தொடக்கத்திலிருந்தே காவிரி பிரச்சினை குறித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் குறைபடுகிறார்கள்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon