மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 22 நவ 2019

பியூட்டி ப்ரியா: அழகை அள்ளித்தரும் பூந்திக்கொட்டை!

பியூட்டி ப்ரியா: அழகை அள்ளித்தரும் பூந்திக்கொட்டை!

உலர்ந்த பூந்தி கொட்டையை உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வெச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில் சீயக்காய் சேர்த்துத் தலைக்குக் குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிரலும் குறையும்.

பூந்தி கொட்டையின் மற்ற பயன்கள்

வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்களைச் சுத்தம் செய்யலாம். இதனைப் பயன்படுத்தி பட்டுத் துணிகளைத் துவைத்தால், சாயம் போகாமல் பட்டு ஜரிகையை பளிச்சென்று இருக்கும்.

பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது.

வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.

இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன. உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதை நீரில் குழப்பி, சற்று நேரம் வைத்திருந்து, பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon