மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

தமிழ் சினிமா ஸ்டிரைக்: முடித்து வைப்பது யார்?

தமிழ் சினிமா ஸ்டிரைக்: முடித்து வைப்பது யார்?

திரைப்படத் துறை சம்பந்தமாக ஆய்வு செய்பவர்கள், கடந்த 29 நாட்களாக நடைபெற்றுவரும் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். திரைத் துறை எப்போதும் போல் படங்களை ரிலீஸ் செய்திருந்தால் குறைந்த பட்சம் 180 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஆகியிருக்கும். மத்திய மாநில அரசுகளுக்குச் சுமார் 60 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருக்கும். திரையரங்குகளுக்கு 60 கோடி வருவாய் கிடைத்திருக்கும். இவற்றை இழந்து திக்குத் தெரியாத காட்டில் பயணிக்கிறோமோ என்று சிறுபட தயாரிப்பாளர்களையும், தனித் திரையரங்குகள் நடத்துபவர்களையும் யோசிக்க வைத்திருக்கிறது இந்த வேலைநிறுத்தம்.

பொருளாதார முடக்கத்தையும் கடந்து, தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் எப்போதுமில்லாத ஆர்வத்துடன் நடைபெற்றுவருகிறது. எந்த ஒரு விஷயத்திலும் இரு கூறுகளாகப் பிளவுபட்டு நிற்கும் தயாரிப்பாளர்கள் தற்போதைய வேலைநிறுத்தத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். முன்னாள் தலைவர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் விஷால் தலைமைக்கு ஆதரவாக உள்ளனர். விஷால் எதிர்ப்பாளர்கள் இவ்விஷயத்தில் தாணு கூறுவதைக் கேட்டு நடக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தெளிவான முடிவுகளை எடுத்துவருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

தயாரிப்பாளர் சங்கம் வைத்துள்ள கோரிக்கைகள்:

1) மக்களிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் .

2) டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து ஏழை, நடுத்தர, உயர்மட்ட மக்கள் மூன்று தரப்பினரும் படம் பார்க்கும் வகையில் முன்பு இருந்ததுபோல் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாவது வகுப்பு என முறைபடுத்த வேண்டும்.

3) தயாரிப்பாளர்கள் முன்பு தியேட்டர்களுக்கு பிரிண்ட் தந்ததுபோல், தற்போது படத்தை மாஸ்டரிங் செய்து கண்டன்ட் தருகிறோம். புரொஜக்டர் வைத்துத் திரையிடுவது திரையரங்க உரிமையாளர்களின் பொறுப்பு.

4) அனைத்து தியேட்டர்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் உண்மையான வசூலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது அந்தப் படத்தின் வசூல் உண்மையிலேயே குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சம்பளம் குறைக்கப்படவேண்டும் .

5) ஒவ்வொரு ஏரியாவிலும் சில நபர்களால் 80% தியேட்டர்கள் கையகப்படுத்தப்பட்டு, தயாரிப்பாளர்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய தியேட்டர்கள் தடுக்கப்படுகிறது. திரையிடும் தியேட்டர்களில் வழக்கமாகத் தரப்படும் டெபாஸிட் பணம் கொடுக்கப்படாமல் தனிநபர்களால் தடுக்கப்படுகிறது. மேலும் வசூல் தொகையில் மிகக் குறைவான சதவீதப் பணமே ஷேர் தொகையாக, அதுவும் பல மாத இழுத்தடிப்பிற்குப் பிறகே தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதனால் சிண்டிகேட் இல்லாமல் இனிமேல் அந்தந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான் நேரடியாகத் தயாரிப்பாளர்களுடன் படத்தைத் திரையிட ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள எந்தக் கோரிக்கைக்கும் நேர்மையான பதிலை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தால் கூற முடியவில்லை. தமிழ்நாட்டில் 969 தியேட்டர்கள் செயல்படுகின்றன. இதில் Inox, Pvr போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் 150 திரைகளை நடத்திவருகின்றன. எஞ்சிய திரைகளில் கோவை ஏரியாவில் திருப்பூர் சுப்பிரமணி, ராஜமன்னார் கட்டுப்பாட்டில் 95 தியேட்டர்கள் உள்ளன. சேலம் ஏரியாவில் DNC சிண்டிகேட் கட்டுப்பாட்டில் 41 திரைகள் உள்ளன. கரூர் நகரில் உள்ள அனைத்து தியேட்டர்களும் சிண்டிகேட்டாக செயல்படுகிறது. வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகளில் சுமார் 100 திரைகள் சீனிவாசன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் கூட்டாகப் புதிய படங்களுக்கு ஃபைனான்ஸ் கொடுத்து பெரிய படங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.

ரிலீஸ் நேரத்தில் கோவை ஏரியாவை அடிப்படையாகக் கொண்டு, பைனான்ஸ் கொடுத்தவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அந்த ஏரியா விநியோக உரிமையைக் கைப்பற்றுகிறார், அதேபோல் மற்ற ஏரியா விநியோக உரிமையை தன்னுடன் சிண்டிகேட் வைத்திருக்கும் நபர்களுக்குப் படத்தை வாங்கிக் கொடுக்கிறார். இப்படித் தமிழகம் முழுவதும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது.

படங்களைத் திரையிட அட்வான்ஸ் கொடுப்பதில்லை, படம் திரையிட்டு ஓடி முடிந்த பின்னரும் ஷேர் தொகையை உடனடியாகக் கொடுப்பதில்லை. நிலத்தில் பாதி கிணறு என்பதுபோல் வசூலில் பாதியைச் செலவுக் கணக்காகக் காட்டுவது. தியேட்டர் என்றால் மின்சாரம் அல்லது ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும். மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டருக்கான பேட்டாவை வசூலிலிருந்து கழிப்பது இன்றைக்கும் செங்கல்பட்டு ஏரியாவில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தக் கோரித் தயாரிப்பாளர்கள் கூறினாலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளால் முடியவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுவது நியாயமாக இருக்கிறது. எனவே, அதனை ஏற்கலாம் எனச் சொந்த தியேட்டர்களை நடத்துவோர் கூறத் தொடங்கியுள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அவரை ஆட்டுவிக்கும் திருப்பூர் சுப்பிரமணி, ராஜமன்னார், சேலம் DNC இளங்கோ, ‘எஸ் பிக்சர்ஸ்’ சீனிவாசன், தென்காசி பிரதாப்ராஜா, ஆகியோர் சொல்வதைக் கேட்கும் தலையாட்டி பொம்மையாக சங்கம் செயல்படுகிறது. தாங்கள் நடத்தும் தியேட்டர்களுக்கு டிஜிட்டல் நிறுவனங்களிடம் வாங்கும் இலவசங்களுக்காக இப்பிரச்சினையில் கியூப் நிறுவனத்துக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுப்பபட்டுவருகிறது.

சிண்டிகேட் அமைப்புகளில் வசூல் தகவல்களில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. அதனை எதிர்த்து கேட்டால் அப்படத்தின் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் அடுத்து வெளியிடும் படங்களுக்கு தியேட்டர் கொடுக்காமல் முடக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர் நலனுக்காக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகள், அதனை நம்பிப் பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் நலன்களை சிண்டிகேட் தலைவர்கள் கண்டுகொள்ளாத போக்கு தொடர்கிறது. இப்படிப்பட்ட காரணங்களால் இந்த சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் சுமுகமான முடிவெடுக்க முயற்சிக்க வேண்டிய திரைப்பட விநியோகஸ்தர்கள், இதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காரணம், தியேட்டர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களே தமிழ் படங்களை வாங்கும் முண்ணனி விநியோகஸ்தர்களாக இருப்பது. தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு பிரதான காரணமாக இருக்கும் கியூப் நிறுவனத்துடனான சர்ச்சையில் தயாரிப்பாளர்களுடன் இணைந்து திரையரங்க உரிமையாளர்கள் செயல்பட முன்வந்தாலே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முடிவு கிடைத்துவிடும். அப்படியொரு முடிவை அவர்களை எடுக்கவிடாமல் தடுப்பது எது என்பதை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தான் கூற வேண்டும்.

-இராமானுஜம்

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon