மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

ஸ்மித் சிந்திய கண்ணீர்: பாடம் கற்கும் கிரிக்கெட்!

ஸ்மித் சிந்திய கண்ணீர்: பாடம் கற்கும் கிரிக்கெட்!

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் கெமரூன் பேன்க்ராஃப்ட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவிட்டனர். இவர்களில் ஸ்மித்தும் பேன்க்ராஃப்டும் மட்டுமே பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்துத் தங்களது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள். பெர்த் விமான நிலையத்தில் இறங்கிய ஸ்மித், அங்கு பேசியபோது கண்ணீர் விட்டு அழுதது ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆதரவை அவருக்கு அதிகப்படுத்திக் கொடுத்திருக்கிறது.

கிரிக்கெட் உலகம் முழுவதுமே ஆஸ்திரேலிய வீரர்களின் இச்செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் ‘ஸ்மித் நிரபராதி’ என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். பந்தைச் சேதப்படுத்திய சதியில் ஈடுபடாமல், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது அதை ஒப்புக்கொண்ட ஸ்மித்துக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற தர்க்கத்தை ஆஸ்திரேலிய ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

ரசிக மனநிலையும் சட்டத்தின் கண்ணோட்டமும்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயலலிதா வழக்காக இருந்தாலும், மும்பையைச் சேர்ந்த சல்மான் கான் வழக்காக இருந்தாலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்மித் வழக்காக இருந்தாலும் ‘ஒரு நட்சத்திரத்தை வழிபடுதல்’ என்ற நிலைக்கு ரசிகர்கள் சென்றபிறகு அவர்கள் சார்ந்த துறையைப் பற்றியும், அவர்கள் சார்ந்த நாட்டின், துறையின் சட்டங்கள் பற்றியும் கவலைப்படுவதே இல்லை என்பது தெரிகிறது. ஆனால், ஸ்மித்தைப் பொறுத்தவரை, பந்து சேதப்படுத்தப்பட்ட சதியைத் தடுக்காமல் விட்டதைத் தவிர மற்ற அனைத்துச் செயல்களிலும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கத் தவறவில்லை. வார்னரும் பேன்க்ராஃப்டும் ஒப்புக்கொள்வதற்கு முன்பே இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டவர் ஸ்மித். என் மீது தவறு எனக்கூறியதும் ஸ்மித் தனது துறை சார்ந்த சட்டத்தையும், அதற்கு நேர்மையாக இருக்கவேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார். யாரையும் குற்றம்சுமத்த விரும்பவில்லை. கேப்டன் என்ற முறையில் இதற்கு நானே முழுப் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்.

தவறுகளுக்கான தண்டனை என்பது அதைச் செய்தவருக்கான தண்டனையாக மட்டுமல்லாமல், அடுத்து யாரும் அதற்கு முயற்சி செய்யக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இருப்பதால் ஸ்மித்துக்குக் கிடைத்திருக்கும் 12 மாத தண்டனையை அவர் ஏற்றாக வேண்டும். அதற்குத் தயாராகவே அவரும் இருக்கிறார். அந்த தீர்க்கத்துடனே பெர்த் விமான நிலையத்திலிருந்து வெளிவந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ஆனால், அவரது அதீத மன உளைச்சல் யோசித்து வைத்தவற்றைப் பேசுவதற்கு முன்பே கண்ணீரை வரவழைத்துவிட்டது.

“நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நான் தான். என் கண் பார்வையில் நடைபெற்ற தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். என்னால் ஏமாற்றமடைந்து கடும் கோபத்திலிருக்கும் சக வீரர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்களுக்கு எனது மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய தலைமைப் பண்பின் தோல்வியாக இதைக் கருதுகிறேன். இதைத் தவறை சரிசெய்யவும், அதனால் உருவான பாதிப்பை மீட்டெடுக்கவும் என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். உலகின் மிகச் சிறந்த விளையாட்டு கிரிக்கெட். என் வாழ்க்கையாகவே அது இருந்தது. மீண்டும் அது அவ்வாறே இருக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆத்மார்த்தமான நம்பிக்கையைப் பாழாக்கியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். இதனால் எனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம் கிடைக்குமாயின், அந்த மாற்றத்துக்கான சம்பவமாக இதை எடுத்துக்கொள்வேன். என் வாழ்க்கை முழுவதையும் இதை நினைத்து வருந்திக் கழிப்பேன். ஆனால், உங்களது மன்னிப்பையும், என் மீதான மதிப்பையும் நான் திரும்பப் பெறுவேன் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது” என்று கண்ணீருக்கிடையில் ஒருவாறு சொல்லி முடித்தார்.

ஸ்மித் பேசியதில் மிக முக்கியமான அம்சம் ஒன்று இருக்கிறது. “கேள்விக்கு உட்படுத்தப்படும் ஒரு முடிவை எடுக்கும்போது, அதனால் யார் பாதிக்கிறார்கள் என்று சிந்தியுங்கள். உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் மீது அன்பு கொண்டவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியவர், தொடர்ந்து தனது தந்தையைக் குறிப்பிட்டு, “இதோ இந்த வயதான மனிதனைப் பாருங்கள். இவரை நான் இப்படிப் பார்த்ததே இல்லை. அதோ என் அம்மா வருத்தத்துடன் நிற்கிறார். ஒரு தவறான முடிவின் மிகப்பெரும் எதிர்வினை இதுதான்” என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதாலும், கண்ணீர் விட்டதாலும் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை தவறென்று சொல்ல முடியாது. ஒரு ஸ்மித் பாதிக்கப்பட்டிருப்பதால் இனிவரும் நூறு பேன்க்ராஃப்ட்களும் வார்னர்களும் கவனமாகச் செயல்படுவார்கள் என்ற நிலை ஏற்படுமாயின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கது.

கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கான மதிப்பைச் சிதைப்பது அதனை அழிவின் பாதைக்குக் கொண்டுசெல்வதற்குச் சமம் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

- சிவா

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon