மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

ராஜினாமா செய்யத் தயார்: அதிமுக எம்.பி.க்கள்!

ராஜினாமா செய்யத் தயார்: அதிமுக எம்.பி.க்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அருண்மொழித் தேவன், ப.குமார், அரி உள்ளிட்ட மூன்று அதிமுக எம்.பி.க்கள் பதவி விலகத் தயார் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் முதல்வரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 29) முடிவடைகிறது. ஆனால் மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த 17நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டும், நாடாளுமன்ற வளாகம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு எம்.பி.க்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

நேற்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், "தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அனைத்து அதிமுக எம்.பிக்களும் தற்கொலை செய்து கொள்வோம்" என்று உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சர்கள் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அதிமுக எம்.பி.க்கள் கடலூர் அருண்மொழித் தேவன், திருச்சி ப.குமார், அரக்கோணம் கோ.அரி உள்ளிட்டோர் முதல்வரைச் சந்தித்துள்ளனர். அவர்கள், காவிரி விவகாரத்திற்காக தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதற்குத் தயாராக உள்ளோம் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அருண்மொழித் தேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போனால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் நான் பதவி விலகத் தயார் என்றும் அதிமுக தலைமை உத்தரவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார் தனது அடுத்தடுத்த ட்விட்களில் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ள அரக்கோணம் எம்.பி கோ.அரி கூறுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் நாங்கள் மட்டுமல்ல, அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon