மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஆயுதப்படை காவலர் தீக்குளிக்க முயற்சி!

ஆயுதப்படை காவலர் தீக்குளிக்க முயற்சி!

தக்கலையில் ஆயுதப்படை காவலர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமியார் மடத்தை அடுத்த உண்ணாமலைக் கடையைச் சேர்ந்தவர் நரேந்திரசிங்(39). ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை கணவருடன் சேர்த்துவைக்கும்படி இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 29) தக்கலை காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி நரேந்திரசிங் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட சக காவலர்கள் அவரை மீட்டுள்ளனர். இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை, டிஜிபி அலுவலக வளாகத்தில் 2 ஆயுதப்படை காவலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு ஆயுதப்படை காவலர் தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த அருண்ராஜ் என்ற காவலர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தற்கொலை செய்துகொண்டார் . அதைத் தொடர்ந்து அயனாவரத்தில் காவல் நிலைய வாசலில் சதீஸ்குமார் எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon