மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழா!

மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழா!

சென்னை மயிலாப்பூரில் அறுபத்து மூவர் திருவிழா இன்று (மார்ச் 29) விமர்சையாக தொடங்கியது.

அனைத்து சிவாலயங்களிலும் பிரம்மோற்சவத்தின்போது அறுபத்து மூவர் விழா விமர்சையாக கொண்டாடப்படும். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா மிகவும் பிரபலமானது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு கடந்த 21 ஆம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, மார்ச் 22ஆம் தேதி பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24ஆம் தேதி அதிகார நந்தி காட்சி விழா நடந்தது. நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எட்டாம் நாளான இன்று காலை 10.30 மணிக்கு திருஞான சம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3.30 மணி அளவில் அறுபத்து மூவர் வீதி உலா தொடங்கியது. இந்த வீதி உலா இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது. உற்சவ மூர்த்திகள் அனைவரும் இரவு மீண்டும் கோயிலை அடைவார்கள்.

அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச்சப்பரத்தில் அமர்ந்து கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். நான்கு மாட வீதிகளும், தெப்பக்குளம் சாலையிலும் வலம் வரும் அறுபத்து மூன்று நாயன்மார்களைக் காண சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் மைலாப்பூரில் குவிந்துள்ளனர்.

விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல் அமைத்துள்ளனர். விழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் நீர்மோர், குளிர்பானங்கள், உணவு, குடிநீர் , இனிப்புகள், பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இரவில் பார்வேட்டை விழா, ஐந்திருமேனிகள் விழா ஆகியவை சிறப்பாக நடைபெறும். நாளை மாலை (மார்ச் 30) 6.30 மணிக்கு இறைவன் இரவலர் கோல விழா நடைபெறவுள்ளது. மார்ச், 31ஆம் தேதி காலை தீர்த்தவாரியும், அன்றிரவு 6.30 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளது.

அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குழந்தைகளையும், தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon