இலக்கை மீறும் நிதிப் பற்றாக்குறை!

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கைத் தாண்டியுள்ள நிலையில், நிதியாண்டின் முடிவில் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
2017-18 நிதியாண்டு நிறைவுபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கைத் தாண்டிச் சென்றுள்ளது. பொதுக் கணக்காளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.7.15 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டு முழுவதுக்குமான நிதிப் பற்றாக்குறை இலக்கு ரூ.5.94 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 11 மாதங்களில் நிதிப் பற்றாக்குறை இலக்கை விட 120.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனினும் நிதியாண்டின் முடிவில் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.