மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

ஜூன் 12-ஐ விட மத்திய அரசின் கவனம் மே 12தான்!

ஜூன் 12-ஐ விட மத்திய அரசின் கவனம் மே 12தான்!வெற்றிநடை போடும் தமிழகம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கான ஜூன் 12 (மேட்டூர் அணை திறக்கும் தேதி) பற்றி கவலைப்படாமல், கர்நாடகத்துக்கான மே 12 (கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி) பற்றியே அதிகம் கவலைப்படுகிறது என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுகளின் தொடர் அலட்சியத்தைப் பட்டியலிட்டுள்ளார்.

“2007-ல் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல், தனது பங்கிற்கு 6 வருடம் இழுத்தடித்த மத்திய காங்கிரஸ் அரசு, 2013இல் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பெரும் போராட்டத்துக்குப் பின், அரசிதழில் வெளியிடுவதோடு நிறுத்தி கொண்டது.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2016இல் உச்சநீதிமன்றம் மீண்டும் மேலாண்மை வாரியம் அமைக்கச்சொன்னபோது, பாஜக அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, இவ்விஷயத்தில் மத்திய அரசிற்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாதாடினார். 2018இல் இறுதி தீர்ப்பு அளித்த பிறகும், கடைசி நாள் வரை தீர்ப்பை அமல்படுத்தாமல் காலந்தாழ்த்தும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார் சிவ. இளங்கோ.

மேலும், “சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சனை தீர்க்கப்படாமல் ஒரு மாநிலம் வஞ்சிக்கப்பட்டுவருவது ஜனநாயகத்தின் தோல்வி. மத்தியில் ஆளக்கூடிய இரண்டு கட்சிகளும் கர்நாடகாவில் வாக்குவங்கியை தக்கவைத்து கொள்வதை மட்டுமே சிந்திக்கின்றனர்.

இந்திரா காந்தி முதல் மோடி வரை வந்த பிரதமர்களில் ஒருவர் கூட தங்கள் வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல், நியாயத்தின் பக்கம் நிற்காதது வருத்தத்திற்குரிய விஷயம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகள் மேல் நடவடிக்கை எடுக்கும் துணிவு நீதிமன்றத்துக்கும் இல்லை. அமைதிவழியில் இருக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முயற்சிசெய்தபிறகும், தமிழகத்திற்கான நீதி கிடைக்கவில்லையெனில், பிரிவினைக்கே வழிவகுக்கும். இந்த அநீதி, பிரிவினைவாத சக்திகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இந்திய இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் கேடாக விளையும்’’ என்று கோபம் காட்டியுள்ளார்.

“கர்நாடகாவில் மே 12 நடக்க இருக்கும் தேர்தலை பற்றி சிந்திக்காமல், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு வழிவகுக்க வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை 50 ஆண்டு காலமாக தட்டிப்பறிப்பது அநியாய அக்கிரமத்தின் உச்சக்கட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமையாவிடில், சுதந்திர இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்று பிழையாக அமையும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon