மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

முதல்வரை சந்திக்கிறார் கமல்ஹாசன்

முதல்வரை சந்திக்கிறார் கமல்ஹாசன்

காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்த முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்த நிலையில், அதற்காக ஆரம்பக்கட்ட பணிகள் கூட இன்னும் ஆரம்பமாகவில்லை. கடைசி நேரத்தில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அரசியல் ரீதியான அழுத்தம் கொடுப்பது குறித்தும் முடிவு செய்துள்ளனர்.

காவிரி விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், "ஸ்கீம் என்றால் என்னவென்று தீர்ப்பிலேயே விளக்கியுள்ளனர். ஒட்டு வேட்டைக்காக இதில் விளையாடாதீர்கள். இதில் அரசியல் வேண்டாம். மக்களுக்கான தேவை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வலியுறுத்தாவிட்டால் யார் பெயரைச் சொல்லி தமிழக அரசு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறதோ, அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவே அது அமைந்துவிடும்" என்று குறிப்பிட்ட அவர் மக்களின் பிரதிநிதியாக இந்தக் கோரிக்கையை நான் முதல்வரிடம் வைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக இன்று அப்பாயின்மென்ட்டும் கேட்டுள்ளேன். சந்திக்க நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

காவிரிக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறுவது அரசியல் பித்தலாட்டம், எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் அதனை வரவேற்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டம் குறித்துப் பேசிய அவர், வரும் 1ஆம் தேதி தூத்துக்குடி சென்று மக்களுடன் மக்களாகப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்றும் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon