மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

விவசாயியாக மாறிய இன்ஜினியர்: கார்த்தி சந்திப்பு!

விவசாயியாக  மாறிய இன்ஜினியர்: கார்த்தி சந்திப்பு!

நம் ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் கார்த்தி.

கார்த்தி-பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் படம் கடைக்குட்டி சிங்கம். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D என்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக சாயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படம் வெளியான பிறகு பெரும்பாலான இளைஞர்கள் விவசாயத்தை நோக்கிப் படையெடுப்பர் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கார்த்தி சமீபத்தில் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரான வேணுகோபால் என்பவரின் விளைநிலங்களுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி , "மெக்கானிக்கல் இன்ஜினியரான வேணுகோபால் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார். முக்கியமாக இவரின் குணநலன்களைப் பார்த்து வியந்துபோனேன். அதனாலேயே அவரின் அனுமதியுடன் இங்கு வந்தேன். இயற்கை விவசாயத்தைப் பார்த்து பல புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களைத் தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்துக் காட்சிகளும் கண்முன் வந்துசெல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கார்த்தியின் இந்த வருகை குறித்துப் பேசிய வேணுகோபால், "நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர், நடிகர் கார்த்தியின் குடும்பம் உங்களிடம் வந்து விவசாயம் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர் என்று கூறினார். மறுநாளே கார்த்தி ஸார் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். கார்த்தி ஸாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது. அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாராட்ட வேண்டியதாகும்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon