மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

சீறிப் பாய்ந்த ஜிசாட் செயற்கைக்கோள்!

சீறிப் பாய்ந்த ஜிசாட் செயற்கைக்கோள்!

இஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் அடங்கிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (மார்ச் 29) மாலை விண்ணில் சீறிப் பாய்ந்தது.

தகவல் தொலைத்தொடர்புக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது ஜிசாட் 6ஏ. இது கிரயோஜினிக் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் 6ஆவது செயற்கைக்கோள் ஆகும். இதே போல், இதைச் சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி இந்தியாவின் 12ஆவது ராக்கெட் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் இன்று மாலை 4.56 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்ட இந்தச் செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி-08 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் 5.13 மணியளவில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்செலுத்தப்பட்டது.

இது குறித்து இஸ்ரோவின் தலைவர் சிவன், "விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்த ஜிஎஸ்எல்வி-08 ராக்கெட், எஸ்-பேன்ட் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-6ஏ-வை பூமியின் சுற்றுப்பாதையில் துல்லியமாகச் செலுத்தியது" என்று கூறியுள்ளார்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.சோம்நாத், "இன்று துல்லியமான சுற்றுப்பாதையை எட்டிவிட்டோம். குறும்புப்பையன் பணிவாகச் சென்றான்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon