மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

நிதிஷ் அரசியல் வாழ்க்கை முடிந்தது: லாலு

நிதிஷ் அரசியல் வாழ்க்கை முடிந்தது: லாலு

பிகார் முழுவதும் வன்முறையும் கிளர்ச்சியும் பரவியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடைத் தீவன முறைகேட்டு வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்துக்கொண்டே வந்ததால் உயர் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து நேற்று மாலை ரயில் மூலம் அவர் டெல்லி வந்தடைந்தார். அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்களைச் சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “பிகார் முழுவதும் வன்முறைகளும் கிளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. என்னைச் சிறையில் அடைத்த பின்னர் மொத்த மாநிலத்தையும் பாஜக தீக்கிரையாக்கியுள்ளது. நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.

அவரது உடல்நிலை குறித்த கேள்விக்கு, தற்போது தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று அவர் பதிலளித்தார்.

முன்னதாக, மார்ச் 17ஆம் தேதி பிகாரில் உள்ள பகல்பூர் என்ற இடத்தில் கலவரம் ஏற்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபேவின் மகன் அர்ஜித் சாஷ்வந்த் மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ், ஐக்கிய ஜனதா தளம்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கலவரம் தொடர்பாக சாஷ்வந்த் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தாலும், அவர்களை வேண்டுமென்றே கைது செய்யாமல் இருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon