மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

வினாத்தாள் லீக்: பயிற்சி நிறுவனர் கைது!

வினாத்தாள் லீக்: பயிற்சி நிறுவனர் கைது!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த பயிற்சி நிறுவனர் இன்று (மார்ச் 29) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு வினாத்தாளும், ப்ளஸ் 2 வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்திற்கான வினாத்தாளும் வாட்ஸ் அப்பில் வெளியானது. மாணவர்களின் பெற்றோர்கள் வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்தவும், மறுதேர்வு நடத்தக்கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்து நேற்று மதியம் முதல் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ தேர்வுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றின் மூலம் கேள்வித்தாள் வெளியாகியிருக்கலாம் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், டெல்லி சிபிஎஸ்இ பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்த விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கணக்கு மற்றும் பொருளாதாரவியல் பாடத்துக்கு டியூசன் எடுத்து வருகிறார். இது தொடர்பாக 25 சிபிஎஸ்இ அதிகாரிகள் மற்றும் 10 கான்வெண்ட்டை சேர்ந்த மாணவர்களிடம் விசாரணை நடத்திவருவதாக சிறப்புக் காவல் ஆணையர் (குற்றவியல் கிளை) ஆர்.பி. உபதய்யா தெரிவித்துள்ளார்.

மார்ச் 15 ஆம் தேதி, ப்ளஸ் 2வகுப்புக்கான கணக்கு பதிவியல் தேர்வு நடைபெற்றது. ஆனால், மார்ச் 14ஆம் தேதி, வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா விசாரணை நடத்தும்படி, கல்வி செயலாளர் மற்றும் கல்வி இயக்குநரிடம் கோரினார். அப்போது,வாட்ஸ் அப்பில் வந்த வினாத்தாளும் உண்மையான வினாத்தாளும் ஒத்துப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்தது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon