மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

ராம்ஜி அம்பேத்கர்: சர்ச்சையை ஏற்படுத்தும் உ.பி.!

ராம்ஜி அம்பேத்கர்: சர்ச்சையை ஏற்படுத்தும் உ.பி.!

அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரின் இடையில் ராம்ஜி என்ற பெயரைச் சேர்க்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் அனைத்து அரசு ஆவணங்களிலும் அம்பேத்கர் பெயரில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அம்மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்ற பெயரையும் இணைத்து “டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று மாற்றக் கோரிக்கை விடுத்தார்.

மாநில அரசிடமும் இதுதொடர்பாக அவர் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, அம்பேத்கர் என்ற பெயரின் நடுவில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க வேண்டும் என உ.பி. அரசு உத்தரவிட்டது. அதன்படி, இனிவரும் அனைத்து அரசு ஆவணங்களிலும் அம்பேத்கரின் பெயர், “டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உ.பி. அரசின் இந்த உத்தரவு பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக எம்பி உதித் ராஜ் கூறுகையில், “அம்பேத்கர் பெயரை மாற்றுவதற்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் எவ்வாறு அழைக்கப்படவேண்டும் என்பது தனிப்பட்ட சுதந்திரம். எதற்காகத் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும். தலித் சமூகத்தினர் இந்த முடிவுக்கு தங்களின் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

அதேபோல், அம்பேத்கர் (Ambedkar) என்ற ஆங்கில உச்சரிப்பில் இருப்பதுபோல் அல்லாமல், இந்தியில் (Aambedkar) என்றே உச்சரிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் ஒருசில பகுதிகளில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் கையொப்பமிட்டுள்ளதாகவும் உ.பி. ஆளுநர் ராம் நாயக் குறிப்பிட்டுள்ளார்.

ராம்ஜி என்பது அம்பேத்கரின் தந்தையின் பெயராகும். இந்தப் பெயர் மகாராஷ்டிராவிலும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon