மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

தொடங்கியது என்டிஆர் பயோபிக்!

தொடங்கியது என்டிஆர் பயோபிக்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார்.

சமூக சீர்திருத்தப் படங்களில் மட்டுமின்றி புராண, இதிகாச கேரக்டர்களில் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்.டி.ராமாராவ். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்றவர். கிருஷ்ணர், துரியோதனன், கர்ணன் எனப் பல புராண கேரக்டர்களிலும் வலம்வந்தவர்.

திரைத் துறை மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய என்டிஆர் ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவில் இப்போது ஆட்சி செய்துவருகிறது. இவரது மருமகன் சந்திரபாபு நாயுடு தற்போது அங்கு முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க உள்ளதாக அவரது மகனும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா கூறியிருந்தார். அதன்படி அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது. அதைத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கிளாப் அடித்துத் தொடக்கிவைத்தார். இயக்குநர் தேஜா இயக்கும் இப்படத்தில் எம்ஜிஆர் போல வேடமணிந்த ஒருவர், படத்தில் பங்கேற்பது போன்ற சில காட்சிகள் படமாக்கப்பட்டது. நாளை முதல் (மார்ச் 30) வழக்கமான ஷூட்டிங் நடைபெறவிருக்கிறது.

இது குறித்துப் பேசியுள்ள பாலகிருஷ்ணா, "மக்கள் எல்லாவற்றையும் எளிதில் மறக்கக்கூடியவர்கள். அதனால் பல விஷயங்கள் நம் ஞாபகத்தில் இருப்பது இல்லை. அதேபோல் என்டிஆரின் புகழும் மறைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் படத்தை உருவாக்குகிறோம்" என்று கூறியுள்ளார். இதன் தொடக்க விழாவில் ஏராளமான திரையுலகினர் மற்றும் என்டிஆர் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தப் படம் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon