மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

பிரதமர் இல்லம் முற்றுகை: தமிழக விவசாயிகள் கைது!

பிரதமர் இல்லம் முற்றுகை: தமிழக விவசாயிகள் கைது!

டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று நதி நீர்ப்பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதனைச் செயல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இன்றுடன் (மார்ச் 29) உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடையும் நிலையில், மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான முடிவு எதையும் வெளியிடவில்லை.

கடந்த திங்கள் கிழமை (மார்ச் 26) முதல் டெல்லி நாடாளுமன்ற வளாகச் சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

”கடந்த ஐந்தாண்டுகளாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டியே, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் காட்டி வந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகி ஆறு வாரங்கள் ஆன நிலையிலும், எதுவும் கூறாமல் மவுனித்திருக்கிறது பாஜக அரசு. கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இவ்வாறு செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

உச்ச நீதிமன்றக் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ”மதியம் 3 மணிக்குள் வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்; அவ்வாறு வெளியிடாவிட்டால் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம்” என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்றனர் தமிழக விவசாயிகள்.

அவர்களை, அங்கு நுழையவிடாமல் தடுத்தனர் டெல்லி போலீசார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் தமிழக விவசாயிகள். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகளைக் கைது செய்து அழைத்துச் சென்றனர் டெல்லி போலீசார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக விவசாயிகளை அழிக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் மோடி அரசிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை. நான்கு நாட்கள் வெயிலில் வாடி உண்ணாவிரதம் இருந்தும், மோடி அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை. மோடி அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காது. எனவே, உச்ச நீதிமன்றமே இதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். மேலும், தென்னிந்தியாவின் ஒற்றுமையையும் அண்டை மாநிலங்களின் உறவுகளையும் பிரதமர் சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார் பி.ஆர்.பாண்டியன்.

போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் மூன்று மணிநேரம் டெல்லி ஜந்தர்மந்தர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு, மாலை 6 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதன்பிறகு, மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பி.ஆர். பாண்டியன். அப்போது, பிரதமர் மோடி வீட்டின் அருகேயோ, மோடியை எதிர்த்தோ இனி டெல்லியில் போராட்டம் நடத்தக்கூடாது என்ற வாய்மொழி ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு காவல்துறை விடுதலை செய்ததாகத் தெரிவித்தார் பி.ஆர்.பாண்டியன்.

தொடர்ந்து பேசியவர், “ஜனநாயகப்பூர்வமான போராடிய எங்களை மிருகத்தை விட கேவலமாகத் தாக்கியுள்ளனர் சில போலீஸ் அதிகாரிகள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையை மோடி ஏவிவிடுவது ஏற்கத்தக்கதல்ல.

அடுத்ததாக, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும். எல்லா அலுவலகங்களையும் முடக்கப்போகிறோம்; இழுத்து மூடப்போகிறோம். உடனடியாக மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டக்களத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon