மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

சிபிஎஸ்இ முறைகேடு: தூக்கம் வராமல் தவித்த அமைச்சர்!

சிபிஎஸ்இ முறைகேடு: தூக்கம் வராமல் தவித்த அமைச்சர்!

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வாட்ஸப்பில் வெளியான விவகாரம் தொடர்பாக, இன்று (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர். அப்போது, தானும் இந்த விவகாரத்தினால் தூக்கம் வராமல் தவித்ததாகக் கூறினார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று தொடங்கியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரையும், ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

கடந்த 26ஆம் தேதியன்று ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொருளாதாரம் தேர்வும், 28ஆம் தேதியன்று பத்தாம் வகுப்பு கணிதம் தேர்வும் நடைபெற்றன. இதற்கான தேர்வுத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸப்பில் வெளியானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை முதலில் மறுத்த சிபிஎஸ்இ நிர்வாகம், நேற்று (மார்ச் 28) குறிப்பிட்ட பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன்படி, ப்ளஸ் 2 பொருளாதாரம் பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதியன்றும், பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதியன்றும் நடத்தப்படும் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, 18 மாணவர்கள் உட்பட 25 பேரிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வினாத்தாளை அச்சிட்டோர், தேர்வுப் பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள், பாதுகாவலர்கள், ஏற்கனவே இதுமாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக விசாரிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். அப்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இது எதிர்பாராத ஒரு சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் எத்தகைய வலியை அனுபவிப்பார்கள் என்று புரிகிறது. நானும் ஒரு பெற்றோர் என்பதால் தெரிகிறது; இந்தப் பிரச்சினையினால், என்னாலும் இரவில் தூங்க முடியவில்லை. தேர்வுத்தாள் முன்கூட்டியே வெளியானதில் தொடர்புடைய யாரையும் மன்னிக்க முடியாது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து தேர்வுகள் நடைபெறும்” என்று அவர் உறுதியளித்தார்.

தேர்வுத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜாவடேகரிடம் பிரதமர் மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon