மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 5 டிச 2019

விரைவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள்!

விரைவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள்!

தமிழகத்தில் விரைவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் இணைந்து நடத்திய டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த ஊழியர்களுக்குப் பாராட்டு விழா மலைக்கோட்டை டிப்போவில் இன்று (மார்ச் 29) நடந்தது.

இதில், திருச்சி மண்டல போக்குவரத்துப் பொது மேலாளர் இளங்கோவன் வரவேற்புரை அளித்தார். வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் 500 ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், "தொடர்ந்து நான்காவது ஆண்டாக கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல அளவில் டீசல் செயல்திறனில் சேமிப்பை ஏற்படுத்தி விருது பெற்றுள்ளது. அந்த ஊழியர்களைப் பாராட்டுகிறேன்.

5.69 ஆக இருந்த டீசல் செயல்திறன் தற்போது 5.71 என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் டீசல் சிக்கனம் என்பது எப்போதுமே மிகவும் அவசியம். டீசல் விலை உயர்ந்துவிட்ட நிலையில் அது தொடர்பான அனைத்து நிர்வாக செலவும் அதிகரித்துள்ளது.

இதற்காக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால் அரசு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த பேருந்துக் கட்டணம். அதுபோன்று, போக்குவரத்துத் துறையில் பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிதாக 2 ஆயிரம் பேருந்துகளை வாங்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த நிதியாண்டில் மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கியுள்ளனர். அதனால், விரைவில் தமிழகத்தில் புதிய 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon