மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

மீண்டும் சொதப்பிய பாஜக!

மீண்டும் சொதப்பிய பாஜக!

எடியூரப்பாவின் அரசு ஊழலில் நம்பர் ஒன் அரசு என பாஜக தேசிய செயலாளர் அமித் ஷா சமீபத்தில் தவறுதலாக கூறிய நிலையில், மோடி அரசு ஏழைகள் மற்றும் தலித்களுக்கு எதுவும் செய்யாது என அமித் ஷாவின் மொழிபெயர்ப்பாளர் மாற்றிக் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பாஜக ஐடி அணித் தலைவர் அமித் மால்வி , மே 12ஆம் தேதி கர்நாடக தேர்தல் நடைபெறும் என ட்விட்டரில் பதிவிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தை பாஜக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினம், பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா கர்நாடக மாநிலம் தேவநகரியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “`ஊழல் அரசுகளுக்கிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்” என்று தங்கள் கட்சி முதல்வர் வேட்பாளர் குறித்தே வாய் தவறி குறிப்பிட்டார்.

அவரது இந்த பேச்சு கடும் விமர்சனத்தை சந்தித்தது. “அமித் ஷா கடைசியில் உண்மையைப் பேசியுள்ளார். அவருக்கு நன்றிகள்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்திருந்தார். இதுபோல், பல்வேறு தரப்பினரின் கேலிக்கும் கிண்டலுக்கும் அவரது பேச்சு உள்ளானது. இந்நிலையில், பாஜக எம்பி பிரஹலத் ஜோஷியின் மொழிபெயர்ப்பு அக்கட்சிக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பிரச்சாரம் ஒன்றில் கலந்துகொண்ட அமித்ஷா, “ சித்தராமையா அரசு, கர்நாடகாவை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்லவில்லை. மத்தியில் மோடி அரசை நீங்கள் நிறுவியுள்ளீர்கள். கர்நாடகாவில் எடியூரப்பாவை தேர்ந்தெடுத்தால் இருவரும் இணைந்து கர்நாடகாவை வளர்ச்சியடையச் செய்வார்கள். இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் மாற்றுவார்கள்” என்று இந்தியில் குறிப்பிட்டார்.

இதை கன்னடத்தில் மொழி பெயர்த்த பிரஹலத் ஜோஷி, “ மாண்புமிகு நரேந்திர மோடி, ஏழைகள், தலித்கள் ஆகியோருக்கு எதுவும் செய்ததில்லை” என்று மாற்றிக் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்தியை ரி-டிவிட் செய்துள்ள சித்தராமையா, “ பாஜக தலைவர்கள் அனைவரும் உண்மையைப் பேச தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon