மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 14 டிச 2019

ஷாப்பிங் ஸ்பெஷல்: கண்ணைக் கவரும் பாந்தினி கலெக்‌ஷன்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: கண்ணைக் கவரும் பாந்தினி கலெக்‌ஷன்!

ஜவுளித் தொழில்நுட்பத்தில் என்னதான் புதுமைகள், நவீனங்கள் வந்தாலும், காலத்தை வென்று நிற்கும் பழங்கால கலைநுட்பங்களுக்கு அவை ஈடாகாது. அப்படிப்பட்ட பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. குஜராத்தி, ராஜஸ்தான் போன்ற வடஇந்திய பாரம்பரிய ஜவுளிகளில் பளிச் நிறம் கொண்ட, விதவிதமான டிசைன்களில் சாயமேற்றப்பட்ட புடவைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். வரையப்பட்ட டிசைனுக்கு ஏற்ப, துணியை விரல்நகங்களைப் பயன்படுத்தி சுங்கிட்டு அதன் பின்பு சாயமேற்றித் தயாரிக்கப்படும் புடவை வகைகள்தான் பாந்தினி புடவைகள்.

​பாந்தா கலை என்பது மிகவும் நுட்பம்வாய்ந்த ஒரு செயல்முறையாகும். அதிக நிபுணத்துவம் தேவைப்படும். வடிவமைப்பு, வடிவங்களின் அளவுகளுக்கு ஏற்ப காபூலி சன்னா, பருப்பு வகைகள், நாணயங்கள் எனப் பல்வேறு பொருட்கள் சுங்கிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பாந்தினி என்ற சொல் சமஸ்கிருதத்தின் பாந்தா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதற்கு முடிச்சிடு என்று அர்த்தம். தற்போது இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், சிந்து, பஞ்சாப், தமிழ்நாடு போன்ற இடங்கள் பாந்தினி புடவைத் தயாரிப்பின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. தமிழகத்தில் சுங்குடி சேலை என்று அழைக்கப்படுவதும், பாந்தினி வகையைச் சேர்ந்ததுதான். சுங்கிட்டு சாயமேற்றப்படுவதால்தான் அதற்கு சுங்கிடு சேலை என்று பெயர்.

குஜராத்தின் கட்ச் மற்றும் செளராஷ்ட்ரா பகுதிகளில் இருக்கும் காத்ரி சமூகம்தான், பாந்தானி வேலையில் பாரம்பரியமாக ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் இவை ராஜஸ்தானில்தான் தற்போது அதிகம் தயாரிக்கப்படுகின்றன. பளிச் நிறங்களில் சாயமிடப்பட்ட துணியிலுள்ள முடிச்சுகளை அவிழ்க்கும்போது, ஒரு டிசைனை உருவாக்குகின்றன. சோக்கிதார், அம்பாடா என முடிச்சுகளின் வகைக்கேற்ப பெயர்கள் வழங்கப்படுகின்றன.

பாந்தெஜ், பாந்தினி, பிலியா, சுங்குடி என உள்ளூர் மொழிகளில் இதற்குப் பல பெயர்கள் உண்டு. துணி எப்படி முடிச்சிடப்படுகிறது என்பதன் அடிப்படையில் மோத்ரா, எக்டாலி, ஷிகாரி என வகைப்படுத்தப்படுகிறது. பல்வேறு வேலைப்பாடுகளுக்குப் பின்னர் கோம்பி, கார்சோலா, படோரி, சந்திரோகனி என இதன் இறுதித் தயாரிப்பு பல்வேறு விதமாக அழைக்கப்படுகிறது.

இவ்வகைப் புடவைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, மெரூன், நீலம், பச்சை, மற்றும் கருப்பு. இதில் பயன்படுத்தப்படும் முக்கிய நிறங்கள் இயற்கையானவை. முடிச்சிட்டு சாயமிடும் முறை கைகளால் செய்யப்படுவதால், அது சிறந்த வண்ணங்களின் காம்பினேஷன் ஆக வெளிப்படுகிறது.

சிவப்பு மற்றும் மெரூன் நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பாந்தினியின் வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு அர்த்தங்கள் அளிப்பதாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு, புதிதாக திருமணமானவர்கள் சிவப்பு நிறம் அணிந்தால் நல்லதிர்ஷ்டமாம் என்பது பராம்பரியமான நம்பிக்கையாக கருதப்படுகிறது.

பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன. இந்த டிசைனில் புடவைகள் மட்டுமல்லாமல், காக்ரா சோளி, சுடிதார் ஷால், டர்பன் போன்ற ஆடைகளும் தயாராகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பத்துக்குரிய புடவைகளாக விளங்கிவரும் பாந்தினி சேலைகளை மக்கள் அதிகம் விரும்புவதால், இவற்றின் தேவையும் விற்பனையும் கடந்த சில பத்தாண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் திருமணம், விழாக்காலங்களில் அதிகம் உடுத்தப்படுகிறது.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon