மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

6 மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத டயாலிசிஸ் கருவி!

6 மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத டயாலிசிஸ் கருவி!

திருவண்ணாமலையில் உள்ள ஆரணி அரசு மருத்துவமனைக்கு "டயாலிசிஸ்" கருவி வழங்கி, சுமார் 6 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் எம்எல்ஏவாக இருப்பவர் அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன். இத்தொகுதியில் உள்ள நோயாளிகளும் பொதுமக்களும் ஆரணி அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர்.

இம்மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கான டயாலிசிஸ் கருவி தேவைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு பொதுமக்களின் தேவைக்காக வழங்கியுள்ளது. அரசு "டயாலிசிஸ்" கருவி வழங்கி 6 மாதங்களாகியும் இதுவரை மருத்துவமனையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல், அப்படியே கருவி முடங்கிக் கிடக்கிறது.

"ரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்கான டயாலிசிஸ் கருவி பொருத்தத் தனியாக கட்டட வசதியுடன் சுத்திகரிப்புத் தண்ணீர் அவசியம் தேவை. ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் தற்போதுதான் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கான பயிற்சி பெறச் சென்றுள்ளனர்.

இவர்கள் பயிற்சி முடித்து வந்தாலும் மருத்துவமனையில் சுத்திகரிப்புத் தண்ணீர் வசதி இருந்தால்தான் புதிய கருவியில் சிகிச்சை அளிக்க முடியும். மேலும் கண் அறுவைசிகிச்சைக்கு தனியாக அறுவைசிகிச்சை மையமும், தனி வார்டும் அமைத்துக்கொடுத்தால், கூடுதலாகக் கண் அறுவைசிகிச்சை செய்ய முடியும். மருத்துவமனையில் உள்ள 14 மருத்துவர்களில், 5 பேர் மாற்று மருத்துவமனைகளுக்குப் பணி செய்யச் செல்வதால் இங்கு சிரமம் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் அடிபட்ட காயங்களுக்கு கட்டு கட்டவும், 'வீல் சேர்' தள்ளவும் மருத்துவமனை ஊழியர்கள் இல்லை. இருப்பினும் முன்பு இருந்ததைவிட மருத்துவமனை சிகிச்சையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று மருத்துவ அதிகாரி நந்தினி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் "டயாலிசிஸ்" கருவி பயன்பாட்டுக்கு வர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்களும் நோயாளிகளும் மருத்துவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon