மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

விவசாயிகளுக்கு உதவாத பயிர் காப்பீடு!

விவசாயிகளுக்கு உதவாத பயிர் காப்பீடு!

பருவநிலை மாற்றங்கள் இந்திய விவசாயிகளைக் கடுமையான இழப்புகளுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், உரிய காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து லைவ் மின்ட் ஊடகம் மார்ச் 28 அன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ’வறட்சி, பனிப்பொழிவு, வெள்ளம் என அனைத்துப் பருவ மாற்றங்களும் இந்திய விவசாயிகளைப் பாதித்துள்ள போதிலும், இழப்பிற்குரிய காப்பீடு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. 2014-15 முதல் 2016-17 வரையிலான காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக ரூ.24,000 கோடி மட்டுமே விவசாயிகள் காப்பீட்டுத் தொகையாகப் பெற்றுள்ளனர். அதாவது இந்த மூன்று நிதியாண்டுகளில் வறட்சி, வெள்ளம் மற்றும் பனிப்பொழிவால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்கள் பெற்ற காப்பீட்டுத் தொகை ரூ.71,124 கோடியாகும். இதில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இம்மாநில விவசாயிகள் மேற்கண்ட மூன்று ஆண்டுகளில் ரூ.16,330 கோடி மட்டுமே பயிர் காப்பீட்டுத் தொகையாகப் பெற்றுள்ளனர்’ என்று கூறியுள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை அளவை ரூ.9 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தியும், பயிர்க் காப்பீட்டுத் தொகையை ரூ.5,500 கோடியிலிருந்து ரூ.13,000 கோடியாக உயர்த்தியும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான நிதி போதிய அளவில் ஒதுக்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு முறையாக காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அண்மையில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகையாக 1 ரூபாய், 2 ரூபாய் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon