மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 மா 2018

மோடிக்கே வரிக்கு வழிகாட்டிய சீனிவாசன்

மோடிக்கே வரிக்கு வழிகாட்டிய சீனிவாசன்

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 30

இராமானுஜம்

அம்பானி அம்பானி என்கிறீர்களே அவரது தொழில் என்ன, சீனு தொழில் என்ன… எப்படி ஒத்துப்போகும்… நாளைக் காலை 7 மணிக்கு என நேற்று காலை முடித்திருந்தோம்.

திருபாய் அம்பானி இப்போது இல்லை இருந்திருந்தால் வேலூரில் விமான நிலையம் அமைக்கச்சொல்லி மத்திய அரசை வலியுறுத்தியிருப்பார். அல்லது அவரே ஹெலிபேட் அமைத்து சீனிவாசனிடம் ஆலோசனை கேட்கத் தனி விமானத்தில் வந்திருப்பார்.

சீனாவில், கொரியாவில், ஜப்பானில் இது உபயோகத்துக்குப் பயன்படாது அல்லது தவறாகத் தயாரித்துவிட்டோம் என்று சொல்லி மொபைல் போன்களை, அந்தந்த நாடுகளின் சுற்றுசூழல் சட்டப்படி அழிப்பதற்குப் பெரும் முதலீட்டைச் செய்ய வேண்டியிருந்தது. அந்த மொபைல் போனைச் சில மாற்றங்களுடன் அட்வான்ஸ் தொகை இல்லாமல் இந்தியாவில் அறிமுகப்படுத்தித் தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் திருபாய் அம்பானி. வட ஆற்காடு, தென்னாற்காடு, பாண்டிச்சேரி சினிமா விநியோகப் பகுதியில் தியேட்டர்களுக்கு அட்வான்ஸ் தொகை வாங்காமல் புதிய படங்களைத் திரையிட ஏற்பாடு செய்த அம்பானி இவர்.

தனது தொழில் போட்டியாளர்களுடன் அம்பானி எப்போதும் நேரடி மோதலை வைத்துக்கொள்ள மாட்டார், போட்டியாளரின் கருவறைவரை தன் விசுவாசிகளை ஊடுருவச் செய்து அவர்களின் நெருக்கடி, சிரமங்களை அறிந்து அந்த நேரம் ஆபத்பாந்தவனாக அங்கு ஆஜராகி நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, பலவீனப்படுத்துவது அவரது கார்பரேட் யுக்தி. தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் துறையில் இந்த யுக்தியைக் கையாள்வதில் சீனிவாசன் கில்லாடி என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தமிழ் சினிமாவில் பூவாகப் புறப்பட்டுத் தயாரிப்பு துறையில் புயலாக சுழன்றடித்தவர். எதையும் ரத்தினச் சுருக்கமாக பேசுபவர். இவர் தயாரிப்பில் விக்ரம், சிம்பு, அஜீத், விஜய், கமல் ஆகியோர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ஆனால் சூரியனாக ஜொலித்த தயாரிப்பு நிறுவனம் தனது அந்தரங்க ஆலோசகர்களின் துரோகத்தால் தரை தட்டிய கப்பலாக மாறிவிட்டது. அவர்கள் எல்லாம் சீனிவாசனுக்கு செண்பக மலராய் சிரத்தையுடன் உளவு கூறிய மூர்த்திகள். வட்டி கட்டுவதற்கு சீனிவாசனிடம் வட்டிக்கு வாங்க ஆலோசனை கூறியவர்கள்.

இங்கிருந்து தான் சீனிவாசன் எம்.ஜி.அடிப்படையில் புதிய படங்களை வாங்கி வெற்றிக் கணக்கை தொடங்கினார். தன் விசுவாசிகள் மூலம் நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்களை விநியோக அடிப்படையில் தனக்கே வந்து சேரும் வகையில் வடிவமைத்து வெற்றி பெற்ற சீனிவாசன் நிலை கண்டு, திரையரங்குகள் சில தாமாக இவரிடம் சரண்டர் ஆனது. மற்றவர்களுக்குப் படங்கள் கொடுப்பதில் பாரபட்சம், மறைமுக நெருக்கடி மூலம் 70% திரையிடல் சீனிவாசன் வசமானது.

கடைகள் அனைத்தும் நேரடியாக அல்லது மறைமுகமாக சீனு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் தயாரிப்புப் பொருட்களை என்னிடம் கொடுத்தால் விற்பனை செய்து பணம் கொடுப்பேன் என்ற நிலை எடுக்கிறபோது தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்துபோனார்கள்.

வெற்றி பெறும் என நம்பப்படுகிற படங்கள் தொடக்கத்திலேயே பைனான்ஸ் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அதிகபட்ச சிபாரிசு, நம்பிக்கையான நண்பர்கள் படங்களுக்கு பொன்னுக்குப் பதிலாகப் பூ வைப்பது போன்று முன்தொகை கொடுக்கப்படும். அந்தப் படம் அதற்கு மேல் அபரிமிதமான வசூல் செய்திருந்தால் சீனு என்ன தொகை கொடுக்க விரும்புகிறாரோ அது படம் முடிந்தவுடன் தாமதம் இன்றித் தயாரிப்பாளருக்குப் போய்ச் சேரும்.

தொடக்க காலத்தில் தேடிப் போய் படங்களை வாங்கிக்கொண்டிருந்த சீனிவாசனைத் தேடி அனைத்துப் படங்களும் குவியத்தொடங்கின. எல்லா உற்பத்தியாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே டீலராக (விநியோகஸ்தராக) மாறிய பின், இந்தியப் பிரதமர் மோடி தற்போது கொண்டுவந்துள்ள GST வரி முறையை 2014ஆம் வருடமே பரிட்சார்த்த முறையில் தொடங்கி அசுர வேகத்தில் அமல்படுத்தியவர் இவரேதான். அது எப்படி?

சினிமா தியேட்டர் வசூல், விநியோகஸ்தர் கணக்கு இவற்றில் இரட்டைக் கணக்கு ஆகியவை நாணயம் தவறிய திரையங்குகளில் அமலில் இருந்த போது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்தது எப்படி?

நாளைக் காலை 7 மணிக்கு.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வியாழன் 29 மா 2018