மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

நான் யார்? கருணாநிதியின் வைரல் வீடியோ!

நான் யார்? கருணாநிதியின் வைரல் வீடியோ!

தன்னைச் சந்திக்க வந்த சிறுமியிடம் தான் யார் என்று கேட்கும் திமுக தலைவர் கருணாநிதியிடத்தில் கலைஞர் தாத்தா என்று சிறுமி கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துவருகிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி. சமீப காலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா அரங்கம், அண்ணா அறிவாலயம், சிஐடி காலனி இல்லம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்தார். தொடர்ந்து கருணாநிதிக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் மு.க.தமிழரசு பேரன் மகிழனை அவ்வப்போது அழைத்து வந்து கருணாநிதியுடன் விளையாட விடுகின்றனர். சமீபத்தில் மகிழனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் வெளியிடப்பட்டது. ஸ்டாலின் பிறந்தநாளின் போது உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியுடன் மகிழ்ந்து பேசும் வீடியோவும், மாநாட்டு நிகழ்வுகளை முரசொலியில் படிக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளன.

இதுபோன்று அவ்வப்போது வெளியிடப்படும் வீடியோக்கள் மூலமாக மட்டுமே திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எவ்வாறு இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் தற்போது திமுக பெண் நிர்வாகி ஒருவர் கருணாநிதியை சந்தித்த வீடியோ ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிர்வாகியின் 5 வயது மகளிடம் கருணாநிதி தன்னை நோக்கிக் கையை காண்பித்து, 'நான் யார்' என்று கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுமி 'கலைஞர் தாத்தா' என்று பதில் கூறுகிறார். கருணாநிதி இதனை மகிழ்ச்சியுடன் நோக்குகிறார். சிறுமியைப் பார்த்து கை நீட்டி கை கொடுத்து வாழ்த்துகிறார். தொடர்ந்து தன் தாயிடம் இருக்கும் பொன்னாடையைப் பிடுங்கும் அச்சிறுமி 'தாத்தா' என்று கூறி அதைக் கருணாநிதியிடம் அளிக்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் கருணாநிதி மெல்ல மெல்லப் பேச முயற்சி செய்துவருகிறார். இந்த வீடியோவைப் பார்க்கும் திமுகவினர் "அன்பு உடன்பிறப்புக்களே" என்று எங்கள் தலைவர் மீண்டும் அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறிவருகின்றனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon