இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் 2016-17 நிதியாண்டில் மொத்தம் ரூ.38,153 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 28ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) சமர்ப்பித்த தங்களது வருவாய் கணக்கு விவரங்களின்படி, 2015-16 நிதியாண்டில் அந்நிறுவனங்களின் வரி செலுத்துவதற்கு முன்பான வருவாய் ரூ.1,699 கோடி இழப்புடன் இருந்தது. அந்த வருவாய் இழப்பு 2016-17 நிதியாண்டில் ரூ.38,153 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வருவாய் விவரங்களைச் சமர்ப்பித்திருந்த 50 நிறுவனங்களில் சுமார் 24 நிறுவனங்கள் இழப்பையே சந்தித்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
தொலைத் தொடர்புத் துறையில் நீடிக்கும் போட்டியை வரவேற்றுள்ள மனோஜ் சின்ஹா, வாடிக்கையாளர் சேவை மற்றும் சேவைத் தரத்துக்கு நெட்வொர்க் நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார். தொலைத் தொடர்புத் துறையில் போட்டி அதிகரிப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சலுகைகள் கிடைக்கும் அதே வேளையில் மறுபுறம் நெட்வொர்க் நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ புதிதாகக் களமிறங்கிய பிறகு சலுகைக் கட்டணங்கள் குறைந்திருந்தாலும், நெட்வொர்க் நிறுவனங்களுக்கான வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது என்பதே உண்மை!