மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

கௌதம் கேட்ட மன்னிப்பு!

கௌதம் கேட்ட மன்னிப்பு!

நரகாசூரன் படத்தின் தயாரிப்பு தொடர்பாக இயக்குநர் கௌதம் மேனனுக்கும், கார்த்திக் நரேனுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவிவந்த நிலையில் இரு தினங்களாக அவர்கள் வெளியிட்ட ட்விட்டுகள் அதை உறுதிசெய்தன. தற்போது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கௌதம் மேனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கார்த்திக் நரேன் அரவிந்த் சாமியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கிவரும் படம் நரகாசூரன். இந்தப் படத்தை கௌதம் மேனன் ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் தயாரிப்பு செலவுக்காக கௌதம் பணம் செலவிடவில்லை என்றும் நரகாசூரன் படத்தைக் காரணமாகக் காட்டி கடன் வாங்கி தனது துருவநட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு செலவு செய்ததாகவும் கார்த்திக் குற்றம் சாட்டினார். இது குறித்து நேற்றே நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக கௌதம் தனது விளக்கத்தை அறிக்கை மூலமாகக் கூறியுள்ளார். “நரகாசூரன் படம் தொடர்பாக கார்த்திக் நரேன் போட்ட ட்வீட் எனக்கு வருத்தத்தை அளித்தது. இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் தவறாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். எனினும் நான் கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமான எந்த ஒரு பணியிலும் நான் ஒரு இயக்குநராக தலையிடவே இல்லை. கார்த்திக் நரேன் கேட்டதற்காகவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களை கமிட் செய்தோம். இப்படத்திற்கு செலவு செய்யும் பணத்தை எனது மற்ற படத்திற்காக செலவிடவே முடியாது. ஏனெனில், இந்தப் படத்தைவிட ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பட்ஜெட் ஏழு மடங்கு அதிகம். அந்தப் படத்தை வேறொரு தயாரிப்பாளர்தான் தயாரிக்கிறார்.”

“‘நரகாசூரன்’ படக்குழுவில் இருந்து விலக வேண்டும் என்று கார்த்திக் நரேன் ஆசைப்பட்டால், நான் மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன். எனது ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு படங்களுமே ஹீரோக்களின் கால்ஷீட்டை வைத்தே தயாராகிவருகின்றன. இதுவரை ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஷூட்டிங் 70 நாட்களும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வின் ஷூட்டிங் 45 நாட்களும் நடைபெற்றுள்ளன. இரண்டு பெரிய நடிகர்கள் நடித்துவரும் இவ்விரு பெரிய படங்களுமே இந்த ஆண்டு (2018) வெளியாகும். இவ்விரு படங்களுமே வேறு இரு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டுவருகிறது. இப்படங்களில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை. அதேபோல், இயக்குநர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் நான் சம்பந்தப்படவில்லை. கார்த்திக் நரேனுக்கும், எனக்குமான கருத்து வேறுபாடு பேசித் தீர்க்கப்பட்டது. ‘நரகாசூரன்’ படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்துவருகிறது. வெகு விரைவில் படம் ரிலீஸாகும்” என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon