மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

தேசிய மருத்துவ ஆணைய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்!

தேசிய மருத்துவ ஆணைய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்!

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் 1956ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலில் ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட மருத்துவப் பிரதிநிதிகள் இருந்துவந்துள்ளனர். மேலும் இந்தக் கவுன்சிலில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட முதன்மை மருத்துவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய மருத்துவக் கவுன்சிலில் தொடர்ந்து பல்வேறு வகை ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதனால், தேசிய மருத்துவ ஆணையம் எனும் பெயரில் புதிய அமைப்பை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவைக் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் சென்ற ஜனவரி 2ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் எழுந்த இந்தக் கடும் எதிர்ப்பினால் மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பிவைத்துள்ளது. இதில் ஓரிரு மாற்றங்கள் செய்யப்பட்டு நிலைக்குழுவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவில், சித்த மருத்துவர்கள் ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. ஆங்கில வைத்தியம் பார்க்கும் சித்த மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்கிறது. பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள் தரமானதாக இருக்கவும், தவறான சிகிச்சை அளிப்போரைக் கடுமையாகத் தண்டிக்கவும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், எம்.பி.பி.எஸ் முடித்த மாணவர்கள் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு உரிமம் பெற "நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்" எனப்படும் தகுதித் தேர்வை எழுதத் தேவையில்லை என்றும் இந்தத் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon