மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

ராமஜெயம் நினைவு நாள் : பிடிபடாத குற்றவாளிகள்!

ராமஜெயம் நினைவு நாள் : பிடிபடாத குற்றவாளிகள்!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு இன்றோடு(மார்ச் 29) ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி திருச்சி பாலக்கரை ரோட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. திருச்சி போலீஸால் இந்த வழக்கில் எந்த துப்பும் துலக்க முடியாத நிலையில் 80 நாள்களுக்குப் பின் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுமார் 1,100 சாட்சிகள், சுமார் 275க்கும் மேலான வாகன உரிமையாளர்களிடம் விசாரணை, கொலை நடந்த பகுதியில் செல்போன் டவரில் பதிவான சுமார் 2,910 செல்போன் எண்கள் ஆய்வு என்று விரிவான விசாரணை நடத்தியும் சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில்தான் 2014 டிசம்பர் மாதம் தன் கணவர் கொலை வழக்கை சிபிசிஐடி திறம்படக் கையாளாததால் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் பல்வேறு வகைகளில் தாமதப்படுத்தி வர, கடந்த நவம்பர் 7ஆம் தேதி, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதையடுத்து தமிழக சிபிசிஐடி போலீஸார் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையின் மொத்த அறிக்கைகளையும், ஆவணங்களையும் சிபிஐக்குக் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து கடந்த ஜனவரி 8ஆம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர், ராமஜெயத்தின் மனைவி லதா, ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. நடைப்பயிற்சி சென்றபோது ராமஜெயம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதி, அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடம் போன்றவற்றையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எனினும் குற்றவாளிகள் குறித்த சிறு தகவல்கள்கூட கிடைக்காத நிலையே உள்ளதாக ராமஜெயத்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் பொதுமக்களின் தகவல்களை சிபிஐ கோரியுள்ளது. வழக்கு தொடர்பாக, சிபிஐ எஸ்.பி - 044-24916341, சிபிஐ ஆய்வாளர் – 8608436441, 8220554839 மற்றும் சிபிஐ அலுவலகம் – 044-24917144, 24468416 ஆகியோரை பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் தகவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இன்று, ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், நினைவு தின கபடிப் போட்டியில் வென்றவர்களுக்கு ராமஜெயம் நினைவு கோப்பையை அவர் வழங்கினார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon