மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்: ராதாரவி

எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்: ராதாரவி

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு எதிராகக் கூறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த விஷயத்தில் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கு மண்டல ஐஜியிடம் நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில் , "நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலம் சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலத்தில் இருந்தது. அதனைப் பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் பெறாமல் சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகம் விற்பனை செய்தது. இதற்கு விளக்கம் கேட்டு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் சரத்குமார் பதிலளிக்கவில்லை. ராதாரவி அளித்த பதில் சங்க நிர்வாகிகளுக்கு திருப்திகரமாக இல்லை. இதனால் ராதாரவி, சரத்குமார், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் கூறப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நாம் ராதாரவியை தொடர்புகொண்டு பேசிய போது , " நில முறைகேடு வழக்கு உண்மையென்றால் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் வழிகாட்டலின் பேரில் தான் நடக்க வேண்டும். எல்லாம் சட்டப்படி நடக்கட்டும். இந்தச் சூழலில் இந்த வழக்கு குறித்து வேறு எதுவும் பேச முடியாது" என்று தெரிவித்தார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon