மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

ராஜினாமா செய்தால்? பொன்.ராதா கேள்வி!

ராஜினாமா செய்தால்? பொன்.ராதா கேள்வி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி தான் ராஜினாமா செய்வதால் எல்லாம் வந்துவிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும், தாங்கள் நாடகமாடத் தயார் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், கருப்பு முருகானந்தம், விஜயராகவன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (மார்ச் 28) மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தனர். அப்போது, காவிரி நதி நீர் தமிழகத்திற்கு முறையாகக் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், கடலில் வீணாகக் கலக்கும் கோதாவரி நதி நீரை தாமிரபரணியில் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

நிதின் கட்கரியைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் முன்னரே அமைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“மேலாண்மை வாரியம் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியதை பாஜக ஆதரிக்கிறது. அதற்காகத்தான் குழுவாகச் சென்று, அதனை வலியுறுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை, காவிரி மேலாண்மை வாரியமாக அமைக்க வேண்டுமென்பது நம்முடைய நிலைப்பாடு.

இந்தப் பிரச்சனை இவ்வாறு நீள்வதற்குக் காரணமே கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் தான். காவிரி விவகாரத்தில், அங்குள்ள அரசை இங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் வலியுறுத்தவில்லை. அவர்கள் இந்தப் பிரச்சனையை அரசியலாக எடுத்துக்கொண்டால், நாங்களும் அரசியலாகப் பார்க்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்துகொள்வோம் என்று மாநிலங்களவையில் அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், பரபரப்புக்காக எது வேண்டுமானாலும் பேசலாம் என்று தெரிவித்தார்.

“இவர் தற்கொலை செய்துகொள்வேன் என்று சொல்வதை, அவரது குடும்பத்தினர், கட்சியினர், தமிழக மக்கள், விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா? எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென்று முதலில் சொன்னார்கள். தங்கள் உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றது திமுக. அதன்பின், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென்றார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை ஏமாற்ற வேண்டும்? எதற்காக இந்த டிராமா போட வேண்டும்? நான், டிராமா போட தயார் இல்லை.

நான் ராஜினாமா செய்வதால் எல்லாம் வந்துவிடும் என்றால், ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், ராஜினாமா என்பது ஒரு முடிவல்ல. அந்த முடிவை எடுத்தால், உடனே எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன்” என்று கூறினார்.

மேலும், தமிழக அனைத்துக் கட்சியினரைச் சந்திக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு முன்னதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திப்பதாகச் சொன்ன தமிழக அரசு அதனைச் செயல்படுத்தவில்லை என்றும் தன் பேச்சில் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

அவர் பேச்சை இடைமறித்து செய்தியாளர்கள் சிலர் கேள்விகள் எழுப்பியபோது, “முதலில் நான் சொல்றதக் கேளுங்க” என்று கூறியவாறு இருந்தார் பொன்னார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon