மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மறுதேர்வு நியாயமா ? சென்னை மாணவர்கள்!

மறுதேர்வு நியாயமா ? சென்னை மாணவர்கள்!

டெல்லியில் வினாத்தாள் வெளியானதற்காக, அனைவருக்கும் மறுதேர்வு வைப்பது நியாயமில்லை என சென்னை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என நேற்று (மார்ச் 28) அறிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன் தினம் (மார்ச் 27) வாட்ஸ் அப்பில் வெளியானதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற ப்ளஸ் 2 வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ் அப்பில் வெளியானதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பல மாணவர்களின் பெற்றோர்கள் வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்தவும், மறுதேர்வு நடத்தக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதாரவியல் பாடத்திற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கும் மறுதேர்வு நடத்தப்படும். இந்த மறுதேர்வுகளுக்கான தேதிகள் ஒரு வாரத்திற்குள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது.

அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவது நியாயமற்ற செயல் என நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ மாணவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வினாத்தாள் வெளியானது டெல்லியில் மட்டும் தான், அதற்காகப் பிறபகுதி மாணவர்களுக்கும் மறுதேர்வு வைப்பது ஏன்? என சென்னை மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவரின் பெற்றோர், “ ஒருசிலர் செய்த தவறால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அனைவருக்கும் தேர்வு வைப்பது நியாயமற்ற செயல். எனவே, மறுதேர்வு என்பதை சிபிஎஸ்இ மறுபரிசீலனை செய்ய வேண்டும்’எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதற்கும், மறுதேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் இன்று (மார்ச் 29) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. பல லட்சக்கணக்கான மாணவர்களின் முயற்சியை சீரழித்து விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவரான ரண்தீப் சுரஜேவாலா தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon