மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

ஏர் இந்தியா: 76% பங்குகள் விற்பனை!

ஏர் இந்தியா: 76% பங்குகள் விற்பனை!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சுமார் ரூ.50,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது. எனவே கடனில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து கடனிலிருந்து விடுபடும் முயற்சியில் மத்திய அரசு நீண்ட நாட்களாகவே முயன்று வருகிறது. ஏர் இந்தியாவின் 5 துணை நிறுவனங்களின் பங்குகளையும் விற்பனை செய்ய நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா சாட்ஸ் ஆகிய மூன்று துணை நிறுவனங்களையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, ஏர் இந்தியாவின் 76 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 24,800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் தனியாரிடம் கைமாறினால் இவர்களின் நிலை என்னாகும் என்ற கேள்வி அவ்வூழியர்கள் உட்பட அனைவரிடத்திலும் இருந்தது. இதற்குத் தீர்வாக, ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்ட பிறகு அதன் ஊழியர்களை ஒரு ஆண்டுக்குப் பணிநீக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை மத்திய அரசு சேர்க்கவுள்ளது. ஒரு ஆண்டுக்குப் பிறகு அந்த ஊழியர்களுக்குச் சில சலுகைகள் வழங்கி விருப்ப ஓய்வு பெறச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள் பெரும்பாலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon